ஆஸ்திரேலியாவுக்கு வெளியே தடுப்புத் தீவுகளில் வைக்கப்பட்டுள்ள அகதிகளை உடனடியாக வெளியேற்றுங்கள்: ஆஸ்திரேலியாவை வலியுறுத்தும் ஐ.நா.
ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்புகள் செயல்படும் நவுரு, பப்பு நியூ கினியா தீவுகளில் அகதிகள் வைக்கப்பட்டுள்ள விவகாரத்தில் ஆஸ்திரேலிய அரசு ஐக்கிய நாடுகளின் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.
கடல் கடந்த தடுப்புகளில் வைக்கப்பட்டிருக்கும் 150க்கும் அதிகமான அகதிகளை அங்கிருந்து வெளியேற்றி ஆஸ்திரேலியாவுக்குள் அழைத்து வர வேண்டும் என ஆஸ்திரேலியாவில் உள்ள மனித உரிமை அமைப்புகள், செயல்பாட்டாளர்களுடன் இணைந்து அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஆணையரும் வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச விதிகளின்படி தஞ்சக்கோரிக்கையாளர்களை பாதுகாப்பாகக் குடியமர்த்துவதற்கான சட்டரீதியிலான கடமை ஆஸ்திரேலியாவுக்கு உள்ளதாக ஐ.நா. தரப்பு குறிப்பிட்டுள்ளது.
“சர்வதேச சட்டத்தின் கீழ் நவுருத்தீவு அல்லது பப்பு நியூ கினியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களுக்கான பொறுப்பிலிருந்து இருந்து ஆஸ்திரேலிய அரசு விலகவோ அல்லது அதிகார வரம்பை, பொறுப்பை மட்டுப்படுத்தவோ முடியாது,” ஐ.நா. அகதிகள் முகமை தெரிவித்துள்ளது.
நவுருவில் உள்ள 66 அகதிகள், பப்பு நியூ கினியாவில் உள்ள 92 அகதிகளை ஆஸ்திரேலியாவுக்குள் கொண்டு வர வேண்டும் என சட்டமசோதா ஒன்றை ஆஸ்திரேலிய பசுமைக் கட்சி தரப்பிலிருந்து அண்மையில் ஆஸ்.நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.
மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் கூற்றுப்படி, கடல் கடந்த தடுப்பு கொள்கை நடைமுறைக்கு (2013யிலிருந்து) வந்தது முதல் இதுவரை 12 தஞ்சக்கோரிக்கையாளர்கள் உயிரிழந்திருக்கின்றனர். பலர் தற்கொலைக்கு முயன்ற சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
கருத்துக்களேதுமில்லை