இலங்கையர்களுக்கு எதிரான மனிதக் கடத்தல் சம்பவங்கள்: இதுவரை 15 முறைப்பாடுகள் பதிவு!

தென்கிழக்காசிய நாடான லாவோஸில் இடம்பெற்றாக கூறப்படும் இலங்கையர்களுக்கு எதிரான மனிதக் கடத்தல் சம்பவங்கள் குறித்து இதுவரை 15 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

தாய்லாந்தில் வேலை வாய்ப்பை பெற்று தருவதாக பொய்யான உத்தரவாதத்தின் பேரில் இலங்கை இளைஞர்கள் பலர் லாவோஸில் சிக்கியுள்ளமை தொடர்பில் நேற்று (புதன்கிழமை) வரை 15 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே பணியகத்தால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அம்பலாந்தோட்டையைச் சேர்ந்த ஆங்கில ஆசிரியர் ருவன் பத்திரன மற்றும் அவருக்கு உதவியதாகக் கூறப்படும் உள்ளூராட்சி வேட்பாளர் அனுர சேனாரத்ன ஆகியோருக்கு எதிராகவே இந்த முறைப்பாடுகள் அனைத்தும் கிடைக்கப்பெற்றுள்ளன.

இந்த முறைப்பாடுகள் அனைத்தும் தென் மாகாணத்தில் உள்ள இளைஞர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஒரு சிலரைத் தவிர, எஞ்சிய இலங்கையர்கள் இன்னும் லாவோஸில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த இளைஞர்களின் தற்போதைய நிலை தொடர்பில் தகவல்கள் கிடைக்கவில்லை.

கடத்தல்காரர்கள் இதற்கு முன்னர் நான்கு இளம் பெண்களையும் ஒரு இளைஞனையும் முதலில் தாய்லாந்துக்கும் பின்னர் லாவோஸுக்கும் அழைத்துச் சென்றுள்ளனர். இதற்காக அவர்கள், சீன நிறுவனம் ஒன்றிடம் இருந்து தலா 5,000 அமெரிக்க டொலர்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.