அரசாங்க நிதி குழுவின் தலைவர் பதவிக்கு ஹர்ஷ டி சில்வாவின் பெயர் மீண்டும் பிரேரணை
பாராளுமன்றத்தின் அரசாங்க நிதி குழுவின் தலைவர் பதவிக்காக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவின் பெயரை மீண்டும் பிரேரித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சிகளின் பிரமதகொறடாவுமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான தெரிவுக்குழு 01 ஆம் திகதி புதன்கிழமை கூடியபோதே இந்த பிரேரணையை கட்சித் தலைவர்களிடம் சமர்ப்பித்தோம். அனைத்து எதிர்க்கட்சிகளினதும் இணக்கப்பாட்டுடனே அரசாங்க நிதி குழுவின் தலைவர் பதவிக்கு கலாநிதி ஹர்ஷ டி சில்வாவின் பெயர் பிரேரிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இந்த பிரேரணை தொடர்பில் சபாநாயகரின் தலைமையில் கூடவுள்ள அனைத்து கட்சிகளினதும் பிரதிநிதிகள் அடங்கிய பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அனுமதியை பெற வேண்டியுள்ளது.
கோப் மற்றும் கோபா குழுக்களின் தலைவர்களை அந்தந்த குழுக்களின் பெரும்பான்மையினரின் ஆதரவுடன் தெரிவு செய்கின்ற போதும், பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அங்கீகாரத்துடனே அரசாங்க நிதி தொடர்பான தெரிவுக்குழுவின் தலைவர் நியமனம் இடம்பெறுகின்றது.
ஆளும் கட்சியினரின் பிரேரணைக்கு அமைய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க, அரசாங்க நிதி தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட நிலையில், அவர் பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையிலேயே இந்த வெற்றிடம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, அரசாங்க நிதி பற்றிய குழு நேற்று பாராளுமன்ற வளாகத்தில் கூடியுள்ளது. இதன்போது தலைவர் ஒருவரை தெரிவுசெய்யாமல் இந்த குழுவை கூட்டுவது அரசியலமைப்புக்கு முரண், அதனால் தலைவர் தெரிவு செய்யப்பட்ட பின்னரே இது கூட்டப்படவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா மற்றும் சந்திம வீரக்கொடி ஆகியோர் தங்களது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இதற்கு இணங்காத ஆளும் தரப்பு உறுப்பினர்கள் தற்போதைக்கு பதில் தலைவர் ஒருவரை நியமித்துக்கொள்ளலாம் என தெரிவித்து, பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தலைமையில் கூட்டம் இடம்பெற்றுள்ளதாகவே தெரியவருகின்றது.
பதில் தலைவர் நியமித்து கூட்டப்படுவது சட்டவிராேதம் என தெரிவித்து, பாராளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷண ராஜகருணா மற்றும் சந்திம வீரக்கொடி ஆகிய இருவரும் இந்த கூட்டத்தில் இருந்து வெளியேறிச்சென்றுள்ளதாக பாராளுமன்ற வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.
கருத்துக்களேதுமில்லை