சம்பளமில்லாது விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்க அவதானம் – சானக வகும்பர

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு திகதி நீடிக்கப்படுமாயின் சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்க விசேட நடவடிக்கை எடுக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் இராஜாங்க அமைச்சர் சானக வகும்பர தெரிவித்தார்.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்கள் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாட்டில் நிதி நெருக்கடி தீவிரமடைந்துள்ள பின்னணியில் உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்தினால் நிதி நெருக்கடி மேலும் தீவிரமடையும். அரச வருமானம் அரச சேவைக்கு போதுமானதாக அமையாத நிலையில் அமைச்சுக்களின் செலவுகள் தற்போது வரையறுக்கப்பட்டுள்ளன.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 7000 அதிகமான அரச சேவையாளர்கள் சம்பளமில்லாத விடுமுறையில் உள்ளார்கள்.

நிதி நெருக்கடியினால் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு இழுபறி நிலையில் உள்ள போது அரச சேவையாளர்களினால் தொடர்ந்து சம்பளமில்லாத விடுமுறையில் இருக்க முடியாது.

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் உத்தியோகபூர்வ தீர்மானத்தை இன்று அறிவிப்பதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

தேர்தலை நடத்தும் திகதி நீடிக்கப்படுமாயின் சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்க விசேட நடவடிக்கை எடுக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் பொது நிர்வாக அமைச்சர்,பிரதமர் தினேஷ் குணவர்தன அமைச்சரவை கூட்டத்தில் எடுத்துரைத்துள்ளார்.

அரசாங்கம் எடுத்த ஒருசில கடுமையான தீர்மானங்களினால் மக்களின் இயல்பு வாழ்க்கை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.பொருளாதார நெருக்கடிக்கு ஒப்பீட்டளவில் தீர்வு கண்டதன் பின்னர் தேர்தலை நடத்துவது சிறந்ததாக அமையும் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.