நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு ஜனாதிபதியால் தீர்வுகாண முடியும்! அமைச்சர் பந்துல நம்பிக்கை
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. அரசியல் கொள்கைகளுக்கு அப்பாற்பட்ட வகையில் பொருளாதாரக் காரணிகளுக்கு தற்போது முன்னுரிமை வழங்கியுள்ளோம் என போக்குவரத்து துறை மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
ஹோமாகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –
சுதந்திரத்தின் பின்னரான காலப்பகுதியில் நாடு என்றுமில்லாத வகையில் பொருளாதாரப் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. நாடு வங்குரோத்து நிலை அடைவதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் மாத்திரம் தான் பொறுப்புக் கூற வேண்டும் எனக் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆட்சியில் இருந்த சகல அரசுகளும் பொறுப்புக்கூற வேண்டும்.
பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்த போது அரசாங்கத்தைப் பொறுப்பேற்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருக்கு என பலமுறை அழைப்பு விடுத்த போதும், ஆசை, ஆனால் பயம் என்பதால் அவர்கள் அரசாங்கத்தைப் பொறுப்பேற்க முன்வரவில்லை.
ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்க அனைத்து சவால்களையும் பொறுப்பேற்றார். பொருளாதார மீட்சிக்காகக் கடந்த ஆறுமாத காலமாக அரசாங்கம் எடுத்த தீர்மானங்களால் மக்களின் இயல்பு வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பொருளாதாரப் பாதிப்புக்கு தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
அரசியல் காரணிகளுகளுக்கு அப்பாற்பட்ட வகையில் பொருளாதாரக் காரணிகளுக்கு தற்போது முன்னுரிமை வழங்கியுள்ளோம்.
அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிராக தற்போது போர்க்கொடி உயர்த்தும் தொழிற்சங்கத்தினர் நடுத்தர மக்களின் பொருளாதார நிலைமை தொடர்பாக அவதானம் செலுத்தவில்லை. நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய வேண்டுமாயின் அனைவரும் விட்டுக் கொடுப்புடன் செயற்பட வேண்டும். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை