புலனாய்வு தகவல் பரிமாற்றம் மத்திய நிலையத்தை இலங்கையில் ஸ்தாபிக்க அமெரிக்கா அழுத்தம் – கம்மன்பில
இலங்கைக்கு கிடைக்கப் பெறும் சகல புலனாய்வு தகவல்களையும், அமெரிக்காவுடன் பகிர்ந்துகொள்ளும் வகையில் ‘புலனாய்வு தகவல் பரிமாற்றல் மத்திய நிலையம்’ ஒன்றை ஸ்தாபித்தல் உள்ளிட்ட நான்கு கடும் நிபந்தனைகளை அமெரிக்காவின் சி.ஐ.ஏ.பிரதானி வில்லியம் பேர்ன் ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளார்.
பொருளாதாரப் பாதிப்புக்கு மத்தியில் நாட்டுக்கு எதிரான செயற்பாடுகள் பகிரங்கமாக முன்னெடுக்கப்படுகின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள சுதந்திர மக்கள் கூட்டணி காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –
அமெரிக்காவின் முதனிலை பாதுகாப்பு அதிகாரிகள் கடந்த மாதம் 14 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்தார்கள். 22 பாதுகாப்பு அதிகாரிகளுக்கு விசேட பாதுகாப்பு மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன, இவர்களைப் பரிசோதனை செய்ய விமான நிலைய சுங்க பிரிவினருக்குக் கூட அனுமதி வழங்கப்படவில்லை.
அமெரிக்க பாதுகாப்பு அதிராரிகள் விமான நிலையத்தில் இருந்து கொழும்புக்கு வரும் போது அதிவேக பாதையில் ஏனைய வாகனங்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. அரச தலைவர்களுக்கு வழங்காத உயர்பட்ச பாதுகாப்பு இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பென்டகன் பாதுகாப்பு அதிகாரிகள் நாட்டுக்கு ஏன் வருகை தந்தார்கள் என அரசாங்கத்திடம் பலமுறை கேள்வி எழுப்பினோம், ஆனால் இதுவரை அரசாங்கம் பொறுப்புடன் பதிலளிக்கவில்லை, அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளின் வருகை தொடர்பில் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தெளிவுபடுத்தல் அறிக்கையை வெளியிடவில்லை.
அமெரிக்காவின் சி.ஐ.ஏ பிரிவின் பிரதான வில்லியன் பேர்ன் இரசியமான முறையில் இவ்வாறு நாட்டுக்கு வருகை தந்துள்ளார்.
22 பேர் அடங்கிய குழுவினர் இலங்கையின் தேசிய பாதுகாப்பை பாரிய அச்சுறுத்தலுக்குள்ளாக்கும் நான்கு பிரதான நிபந்தனைகளை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளனர்.
இலங்கைக்கு கிடைக்கப் பெறும் சகல புலனாய்வுத் தகவல்களையும், அமெரிக்காவுடன் பகிர்ந்துக் கொள்ளும் வகையில் ‘புலனாய்வு தகவல் பரிமாற்றல் மத்திய நிலையம்’ஒன்றை ஸ்தாபித்தல் –
இரண்டாவது, விஞ்ஞான பூர்வ குடியகழ்வு கட்டுப்பாட்டு முறைமையை இலங்கை விமான நிலையங்களில் ஸ்தாபித்தல் –
மூன்றாவது, இலங்கையுடன் தொடர்புகளை மேற்கொள்ளும் வெளிநாட்டு தொலைபேசி வலையமைப்பு தொடர்பான தகவல்களை அமெரிக்காவுடன் பகிர்ந்துகொள்ளல் மற்றும் சோபா ஒப்பந்தத்தை விரைவாக கைச்சாத்திடல் உள்ளிட்ட நான்கு பிரதான நிபந்தனைகளை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளார்கள்.
முன்வைக்கப்பட்ட இந்த நிபந்தனைகளை மீள்பரிசீலனை செய்வதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம் சோபா ஒப்பந்தத்தை கைச்சாத்திட முயற்சித்த போது நாட்டில் ஏற்பட்ட நிலைமையை அவர் நன்கு அறிவார்.
அமெரிக்காவின் முதனிலை பாதுகாப்பு அதிகாரிகளின் நிபந்தனைகளை அரசாங்கம் எவ்வாறு செயற்படுத்தும் என்பதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை