கல்முனை மாநகர ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள் ; ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி உறுதி
கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற ஊழல் தொடர்பில் குற்றமிழைத்தவர்களை முறையாக விசாரணை செய்து குற்றத்தை நிரூபித்து அவர்களுக்கான உரிய தண்டனைகளை பெற்றுக்கொடுக்க கல்முனை மாநகர சபை தயாராக இருப்பதாகவும், அவற்றை கையாள உதவி ஆணையாளர், கணக்காளர், பொறியியலாளர், பிரதம இலிகிதர் அடங்கிய குழுவொன்றை அமைந்துள்ளதாகவும், சட்ட நடவடிக்கைகளுக்கான விடயங்கள் முனைப்புடன் இடம்பெறுவதாகவும் கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி கல்முனையன்ஸ் போரமிடம் தெரிவித்தார்.
கல்முனையன்ஸ் போரம் அமைப்பின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் முபாரிஸ் எம். ஹனிபா தலைமையிலான கல்முனையன்ஸ் போரம் அமைப்பினரும், கல்முனை பிரதேச சமூக செயற்பாட்டாளர்களும் இன்று காலை கல்முனை மாநகர ஆணையாளரை சந்தித்து கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பில் கேட்டறிந்து, மகஜரொன்றையும் கையளித்தனர். இச்சந்திப்பின் போது கருத்து தெரிவித்த போதே ஆணையாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கல்முனை மாநகர சபையில் 78 இலட்சம் அளவில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக முதல்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அந்த பெறுமதி 1.9 கோடி அளவில் உள்ளது போன்ற அறிக்கைகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்த ஆணையாளர் அந்த பெறுமதி கணனி தரவு உட்புகுத்துகையின் போது ஏற்பட்ட வலுத்தொகை செலவையும் சேர்ந்திருக்கலாம் எனவும் குறிப்பிட்டார்.
எப்படியாயினும் பாரியளவிலான நிதி மோசடி இடம்பெற்றுள்ளது உறுதியாகியுள்ளது. அது பற்றி விசாரணைகளை மேற்கொள்ள உயர்மட்ட அதிகாரிகளின் உதவியை நாடியுள்ளோம். இந்த விடயம் தொடர்பில் கணனி தொழிநுட்ப வல்லுநர்கள் அடங்கிய குழுவொன்றை விசாரணைக்கு நியமிக்குமாறு உள்ளூராட்சி திணைக்களத்தை கோரியுள்ளோம் என்றார்.
கருத்துக்களேதுமில்லை