பொருளாதாரம்,ஜனநாயகம் ஆகிய இரண்டையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு – நிதி இராஜாங்க அமைச்சர்
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவது அவசியமற்றது என்ற நிலைப்பாட்டில் பெரும்பாலான மக்கள் உள்ளார்கள். பொருளாதாரம் மக்களின் ஜனநாயக உரிமை ஆகிய இரண்டையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்கான நிதி விடுவிப்பு தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவை கௌரவமாக ஏற்றுக்கொள்கிறோம். நாட்டின் நிதி நிலைமை மற்றும் தேர்தல் நடவடிக்கைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான சிக்கல் நிலை ஆகியவற்றை உயர்நீதிமன்றத்துக்கு சத்தியகடதாசி ஊடாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
பொருளாதார மீட்சிக்காக அரசாங்கம் கடந்த ஆறு மாத காலமாக எடுத்த தீர்மானங்களினால் நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை தற்போது வழமை நிலைக்கு திரும்பியுள்ளது. எதிர்தரப்பினர் குறிப்பிடுவது போன்று வரி அதிகரிக்காமல் இருந்திருந்தால் நாட்டில் மீண்டும் ஒரு பாரிய மக்கள் போராட்டம் தோற்றம் பெற்றிருக்கும்.
புதிய வரி கொள்கைக்கு மாதம் ஒரு இலட்சத்துக்கு மேல் வருமானம் பெறும் தரப்பினர் தான் தற்போது போர்கொடி உயர்த்துகிறார்கள்.நடுத்தர மக்கள் பொருளாதார ரீதியில் நெருக்கடிகளை எதிர்க்கொண்ட போது இவர்கள் போராட்டத்தில் ஈடுபடவில்லை.பொருளாதார மீட்சிக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்துவது அவசியமா என நாட்டு மக்கள் கருதுகிறார்கள்.நாட்டின் பொருளாதாரம்,மக்களின் ஜனநாயக உரிமை ஆகிய இரண்டையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு.
பொருளாதாரத்தை நெருக்கடிக்குள்ளாக்கி ஜனநாயகத்தை பாதுகாக்க முடியாது.மக்களின் வாக்குரிமையை நெருக்கடிக்குள்ளாக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது. தேர்தலை பிற்போட்டால் அது அரசாங்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நன்கு அறிவோம் என்றார்.
கருத்துக்களேதுமில்லை