அரசியலுக்கு அப்பால் ஒன்றுபடுவோம்: சிவநேசதுரை சந்திரகாந்தன் அழைப்பு!
அனைவரும் அரசியலுக்கு அப்பால் ஒன்றுபட்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்கான அபிவிருத்திக்காக உழைப்போம் என மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு- மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நீர்பாய்ச்சல் கால்வாய்களை புனரமைக்கும் பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டதன் பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொழில்நுட்ப மாற்றத்தை நோக்கி விவசாய அமைப்புகள் மற்றும் பொது அமைப்புக்கள், மக்களை ஊக்கப்படுத்த வேண்டும் என அவர் இதன்போது வலியுறுத்தினார்.
மேலும், 2023-24ஆம் ஆண்டுகளில் பயிர்களுக்கான நீர் பாசன திட்டங்களையும் கிராமிய வீதிகளையும் அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
குறைந்தது உளவியந்திரத்தைக் கொண்டு செல்லுகின்ற முக்கியமான பாதைகளையாவது செய்துதர நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் குறிப்பிட்டார்.
தனது அமைச்சில் 10 மில்லியனுக்கு மேலான பணம் இருப்பதாகவும் இந்த பணிகளுக்காக மூன்று மில்லியன் தொகையையாவது ஒதுக்குவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
23 வருடத்திற்கு முன்பாக திட்டமிடப்பட்ட, உன்னிச்சை நீர்பாசன திட்டத்தின் கீழ் உள்ள நாவற்காடு-பாலக்காடு நீர்ப்பாய்ச்சல் கால்வாயை புனரமைக்கும் பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.
மாவட்ட நீர்பாசனதிணைக்களத்தின் பணிப்பாளர் நாகராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நீர்பாசனத்துறை இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஸ பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா உட்பட திணைக்களங்களின் தலைவர்கள், கமக்கார அமைப்புகளின் அதிகாரசபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை