மீண்டும் ஒருவருடத்திற்கு தேர்தலைக் காலம் தாழ்த்த சதி ; தேர்தல் ஆணைக்குழு இடமளிக்கக்கூடாது – ஐக்கிய மக்கள் சக்தி

எல்லை நிர்ணய குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு அதன் மூலம் சூழ்ச்சி செய்து மீண்டும் ஒரு வருடத்துக்கு தேர்தலைக் காலம் தாழ்த்துவதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அடுத்த திட்டமாகும்.

எனவே தேர்தல் ஆணைக்குழு அதற்கு இடமளிக்காமல் தேர்தலுக்கான தினத்தை அறிவிக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

நாம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இரகசிய ஒப்பந்தங்களை மேற்கொள்ளாமல் , நீதிமன்றத்தை நாடி சட்ட ரீதியான வெற்றியைப் பெற்றுக் கொண்டுள்ளோம்.

ஆனால் அரசாங்கத்தை எதிர்ப்பதாகக் கூறும் வேறு சிலர் தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு கூட எதிர்ப்பை வெளியிடவில்லை.

தேர்தலுக்காக வரவு – செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியை முடக்குவதை தவிர்க்குமாறு தெளிவான தீர்ப்பை நீதிமன்று வழங்கியுள்ளது. எனவே பிரிதொரு சூழ்ச்சியின் மூலம் தேர்தலைக் காலம் தாழ்த்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆயத்தமாககிக் கொண்டிருக்கிறார் என எமக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இந்நிலையில் நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ள போதிலும் , தேர்தல் ஆணைக்குழு ஏற்கனவே அறிவித்ததைப் போன்று கடந்த வெள்ளிக்கிழமை தேர்தலுக்கான தினத்தை அறிவிக்காமையானது எம்மை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. எனவே, தேர்தல் ஆணைக்குழு இனியும் தாமதிக்காது இன்றையதினம் தினத்தை அறிவிக்க வேண்டும்.

தொடர்ந்தும் கலந்துரையாடிக் கொண்டிருப்பதற்கு எதுவும் இல்லை. அரசமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கமைய பொலிஸ் திணைக்களத்துக்கும் , நிதி அமைச்சிற்கும் , அரச அச்சகத்திற்கும் பணிப்புரையை மாத்திரமே விடுக்க வேண்டியுள்ளது. எனவே அதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணைக்குழு விரைந்து எடுக்க வேண்டும்.

எல்லை நிர்ணய குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு தேர்தலை மேலும் ஒரு வருட காலத்துக்கு காலம் தாழ்த்துவதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அடுத்த திட்டமாகும். அவருக்கு வாக்கு வங்கி குறைவடைந்துள்ளமைக்கு எம்மால் என்ன செய்ய முடியும்? இவ்வாறு ஏதேனும் சூழ்ச்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டால் நாம் மீண்டும் மக்களுடன் வீதிக்கு இறங்குவோம். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.