மனித உரிமைகள் விவகாரம் அரசியல் மயமாக்கப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் அவசியம் – ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை

மனித உரிமைகள் விவகாரம் அரசியல்மயமாக்கப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும், கரிசனைக்குரிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல் மற்றும் பல்தரப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றின் ஊடாகத் தீர்வுகாண முயலவேண்டுமே தவிர, மோதல்களைத் தோற்றுவித்தல், ஒருதலைப்பட்சமான தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் செயற்படக்கூடாது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வலியுறுத்தியுள்ள இலங்கை, தாம் ஏற்கனவே கூறியதுபோன்று 51ஃ1 தீர்மானத்தை முழுமையாக நிராகரிப்பதாக அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 52 ஆவது கூட்டத்தொடர் கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமானதுடன் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.இக்கூட்டத்தொடரின் அமர்வில் இலங்கை சார்பில் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணாதிலக, மனித உரிமைகள் பேரவையால் நிறைவேற்றப்பட்ட எவ்வகையிலும் பயனளிக்காத தீர்மானங்களின் தொடர்ச்சியாக கடந்த வருடமும் இலங்கையின் உடன்பாடின்றியே 51ஃ1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

‘ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46ஃ1 தீர்மானத்தின் பிரகாரம் அந்தப்பேரவையினாலேயே சுயமாக முன்வைக்கப்பட்ட விளக்கங்களின் அடிப்படையில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தால் இலங்கை தொடர்பில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஆதாரங்களைத் திரட்டும் வெளியகப்பொறிமுறையை மேலும் விரிவுபடுத்தி – வலுப்படுத்துகின்ற 51ஃ1 தீர்மானத்தை ஏற்கனவே கடந்த ஒக்ரோபர் மாதம் வெளிவிவகார அமைச்சர் கூறியமை போன்று நாம் முழுமையாக நிராகரிக்கின்றோம்.

இந்தத் தீர்மானங்கள் எமது நாட்டு மக்களுக்கு எவ்வகையிலும் உதவவில்லை என்பதுடன் இலங்கை சமூகம் துருவமயப்படுத்தப்படுவதற்கு வழிவகுப்பதாக அமைந்துள்ளது.

அதுமாத்திரமன்றி, இவை இலங்கையில் நல்லிணக்கத்தை மேம்படுத்தல் என்ற இலக்கைப் பூர்த்திசெய்யும் வகையில் அமையவில்லை.

எனவே இது வேறு பயனுள்ள விடயங்களுக்காகப் பயன்படுத்தப்படக்கூடிய ஐ.நா. உறுப்புநாடுகளின் நிதியை வீணடிக்கின்ற செயற்திறனற்ற நடவடிக்கை என்பதே எமது நிலைப்பாடாகும். – என்றும் இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணாதிலக தெரிவித்துள்ளார்.

அதேபோன்று மனித உரிமைகள் விவகாரம் அரசியல்மயமாக்கப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும், கரிசனைக்குரிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல் மற்றும் பல்தரப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றின் ஊடாகத் தீர்வுகாண முயலவேண்டுமே தவிர, மோதல்களைத் தோற்றுவித்தல், ஒருதலைப்பட்சமான தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் செயற்படக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதுமாத்திரமன்றி இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதை முன்னிறுத்தி இயங்கிவரும் கட்டமைப்புக்கள் யுத்தத்தின் பின்னரான மீட்சியை அடைந்துகொள்வதை இலக்காகக்கொண்டு செயலாற்றிவருவதாகவும் ஹிமாலி அருணாதிலக பேரவையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பல்வேறுபட்ட சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கும், வடக்கு – கிழக்கு மாகாணங்களைச்சேர்ந்த மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்குமென ஜனாதிபதியின் தலைமையின்கீழ் அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அந்தக்குழு, உண்மையைக் கண்டறியும் பொறிமுறையை ஸ்தாபித்தல், புதிய பயங்கரவாதத்தடைச்சட்ட வரைவைத் தயாரித்தல், புலம்பெயர்ந்துவாழும் இலங்கையர்களுக்கென பிரத்தியேக அலுவலகமொன்றை ஸ்தாபித்தல், வடக்கு – கிழக்கு தொடர்பில் இடைவிலகாத அபிவிருத்திச்செயற்திட்டமொன்றைத் தயாரித்தல், காணாமல்போனோர் விவகாரம் மற்றும் காணி விடுவிப்பு என்பன தொடர்பில் உரியவாறான தீர்வை வழங்கல் ஆகியன உள்ளடங்கலாக உடனடியாகத் தீர்வுகாணப்படவேண்டிய பிரச்சினைகளை இனங்கண்டுள்ளது எனவும் ஹிமாலி அருணாதிலக அவரது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அரசமைப்பின் பிரகாரம் உண்மையைக் கண்டறியும் பொறிமுறையொன்றை ஸ்தாபிப்பது மேற்படி கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன எனவும், இலங்கைக்குப் பொருத்தமான உண்மையைக் கண்டறியும் செயற்திட்ட மாதிரி தொடர்பில் ஆராயப்பட்டுவருதாகவும் பேரவையிடம் சுட்டிக்காட்டியுள்ள இலங்கையின் வதிவிடப்பிரதிநிதி, கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அரசமைப்புக்கான 21 ஆவது திருத்தத்தின் ஊடாக நாட்டின் ஜனநாயக நிர்வாகம் வலுப்படுத்தப்பட்டிருப்பதுடன் அரசமைப்புப்பேரவை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களின் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதுமாத்திரமன்றி தேசிய பாதுகாப்பு தொடர்பான கரிசனைகள் மற்றும் சர்வதேச சட்ட நியமங்கள் ஆகிய இரண்டையும் சமநிலையில் பேணக்கூடியவாறான பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் அமைச்சரவை உபகுழுவால் தயாரிக்கப்படுவதாகவும் அவர் எடுத்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.