அரசியல் விவகாரங்களில் பௌத்த தேரர்களின் தலையீடுகளே இனப்பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படாமைக்குக் காரணம் – விக்னேஸ்வரன் சாடல்
இலங்கையில் நிலவும் இனப்பிரச்சினை இன்னமும் தீர்க்கப்படாமல் இருப்பதற்கு அரசியல் விவகாரங்களில் பௌத்த தேரர்களால் மேற்கொள்ளப்படும் தலையீடுகளே காரணம் என்பதே எனது நிலைப்பாடாகும்.
வடக்கு, கிழக்கு வாழ் தமிழ்மக்களின் பிரச்சினைகள் என்னவென்பதைக் கண்டறிவதற்கு ஆங்கிலம் அல்லது தமிழ்மொழி பேசக்கூடிய பௌத்த தேரர்கள் தமிழ் தலைவர்களுடன் கலந்துரையாடுவது இன்றியமையாததாகும் என்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
அரசமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தக்கூடாது என வலியுறுத்தி மல்வத்து, அஸ்கிரிய, அமரபுர மற்றும் ராமாஞ்ஞ பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் கடந்த மாதம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கூட்டாகக் கடிதமொன்றைக் கையளித்திருந்தனர்.
அந்தக் கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை மேற்கோள்காட்டி, அவற்றுக்கு விளக்கமளித்து இந்நான்கு மகாநாயக்க தேரர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தார்.
அந்தக் கடிதத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்கள் சிங்கள சமூகத்தின் மத்தியில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன எனவும், எனவே மகாசங்கத்தினரை விமர்சிப்பது ஏற்புடையதா? என்றும் எழுப்பப்பட்டுள்ள கேள்விக்கு அளித்திருக்கும் பதிலிலேயே சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியிருப்பவை வருமாறு –
எனது கருத்துக்கள் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன என நான் கருதவில்லை. மாறாக, அவை நேர்மறையான சூழ்நிலையொன்றையே தோற்றுவித்திருக்கின்றன. குறிப்பாக அரசியலில் பௌத்த தேரர்களின் வகிபாகத்தின் ஏற்புடைமை தொடர்பாகப் பல சிங்கள பௌத்தர்கள் கேள்வியெழுப்ப ஆரம்பித்திருக்கின்றார்கள்.
இலங்கையில் நிலவும் இனப்பிரச்சினை இன்னமும் தீர்க்கப்படாமல் இருப்பதற்கு அரசியல் விவகாரங்களில் பௌத்த தேரர்களால் மேற்கொள்ளப்படும் தலையீடுகளே காரணம் என்பதே எனது நிலைப்பாடாகும்.
வடக்கு, கிழக்குவாழ் தமிழ்மக்களின் பிரச்சினைகள் என்னவென்பதைக் கண்டறிவதற்கு ஆங்கிலம் அல்லது தமிழ்மொழி பேசக்கூடிய பௌத்த தேரர்கள் தமிழ்த் தலைவர்களுடன் கலந்துரையாடுகின்றமை இன்றியமையாததாகும்.
போராட்டங்களில் ஈடுபடும் தேரர்களுக்கு அதிகாரப்பரவலாக்கத்துக்கும் அதிகாரப்பகிர்வுக்கும் இடையிலான வேறுபாடும் ஒற்றையாட்சி அரசமைப்புக்கும் கூட்டாட்சி அரசமைப்புக்கும் இடையிலான வித்தியாசமும் தெரியவில்லை. அதுமாத்திரமன்றி அவர்களது தாய்மொழியின் வரலாறுகூட அவர்களுக்குத் தெரியாது.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வில் குழப்பம் விளைவிக்கவேண்டிய தேவை அரசியல்வாதிக்கு இருக்குமாயின், அதற்குரிய உடனடி ஆதரவை பௌத்த தேரரிடமிருந்து இலகுவாகப் பெறமுடியும்.
‘குறித்த நபர் நாட்டைப் பிளவுபடுத்த முற்படுகின்றார்’ அல்லது ‘குறித்த நபர் விடுதலைப்புலிகள் உறுப்பினர்’ அல்லது ‘குறித்த நபர் இந்தியாவின் கைப்பொம்மை’ போன்ற விடயங்களை மாத்திரம் அவர்களிடம் கூறினால் போதுமானதாகும்.
உடனே அவர்கள் காவி உடையுடன் வீதிக்கு இறங்கிவிடுவார்கள். அவர்கள் உண்மை நிலைவரத்தைப் புரிந்துகொள்ளாமல் ‘சீன மத்தாப்பூ’ போன்று உடனடியாக வெடித்துவிடுவார்கள் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை