பொய் கூறி தேர்தல் ஆணைக்குழுவுடனான சந்திப்பை நிதி அமைச்சின் செயலாளர் தவிர்த்துள்ளார் – சஜித் சபையில் குற்றச்சாட்டு

நிதி அமைச்சின் செயலாளர் தேசிய பாதுகாப்பு பேரவை கூட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும் என தெரிவித்திருப்பது, தேர்தல் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடுவதை தடுப்பதற்காகும். ஜனாதிபதி சபையில் இருக்கும் போது எவ்வாறு தேசிய பாதுகாப்பு பேரவை இடம்பெற முடியும் என கேட்கிறோம் என எதிக்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (07) நிலையியற் கட்டணை 27 2இன் கீழ் கேள்வி நேரத்தின் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

இந்நாட்டிலுள்ள பெரும்பான்மையான உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களின் பதவிக் காலம் இவ்வருடம் மார்ச் மாதத்துடன் நிறைவடையவுள்ள போதிலும்,தற்போதைய அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டுள்ள அதிருப்தியை மூடி மறைக்க அரசாங்கம் தொடர்ந்தும் தேர்தலை ஒத்திவைக்க கடுமையாக முயற்சித்து வருகின்றது, தேர்தலை நடத்தாமல் தடுக்க இதுவரை சுமார் 22 விதமான கூட்டு சதிகளை அரசாங்கம் கையாண்டுள்ளதாக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்த நிலையில்,தேர்தலை நடத்துவதற்கு நிதியை வழங்காமல் இருப்பதுதான் அரசாங்கத்தின் கடைசி முயற்சியாக தெரிவதோடு,இது ஜனநாயகத்தை நசுக்கும் விடயமாகவும் அமைந்துள்ளது.

அத்துடன் நிதி அமைச்சின் செயலாளரை கலந்துரையாடுவதற்கு தேர்தல் ஆணைக்குழு இன்று (07)காலை அழைத்திருந்தது. ஆனால் தேசிய பாதுகாப்பு பேரவையில் சந்திப்பொன்று இருப்பதாக தெரிவித்து, தேர்தல் ஆணைக்குழுவுடனான கலந்தரையாடலை புறக்கணித்திருக்கிறார்.

அவ்வாறானதொரு பாதுகாப்பு பேரவை கூட்டம் இடம்பெற்றதாக தெரியவில்லை. ஏனெனில் ஜனாதிபதி, பிரதமர். பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் என அனைவரும் சபையில் இருக்கும்போது எவ்வாறு தேசிய பாதுகாப்பு பேரவை கூட்டம் நடத்துவது.

நிதி அமைச்சின் செயலாளரை தேர்தல் ஆணைக்குழுவுடனான கலந்தரையாடலுக்கு அனுப்பாமல் தடுப்பதற்கே தேசிய பாதுகாப்பு பேரவை கூட்டம் இடம்பெறுவதாக பொய் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்றார்.

இதன்போது சபையில் இருந்த பிரதமர் தினேஷ் குணவர்த்தன, காலையில் தேசிய பாதுகாப்பு பேரவையின் கூட்டம் இடம்பெற்றது. அந்த கூட்டத்தில் இருந்துவிட்டே ஜனாதிபதி சபைக்கு வந்தார். சபையில் அவரது விசேட உரை முடிந்தவுடன் மீண்டும் அந்த கூட்டத்தில் கலந்துகொள்ள செல்கிறார். ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சர் என்றவகையில் அந்த கூட்டத்திலும் கலந்துகொள்ளவேண்டி இருக்கிறது. அதேபோன்று நிதி அமைச்சர் என்ற வகையில் பாராளுமன்றத்துக்கும் வரவேண்டிய நிலை இருக்கிறது. அதன் பிரகாரமே ஜனாதிபதி செயற்பட்டார்.

அத்துடன் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் தேசிய பாதுகாப்பு பேரவையின் கூட்டம் இடம்பெறுகிறது. இது எதிர்க்கட்சித் தலைவருக்கும் தெரியும்.. அதனால் நிதி அமைச்சின் செயலாளர் இன்று தேர்தல் ஆணைக்குழுவுடன் கலந்துரையாட செல்லாவிட்டாலும் நாளை (08) தேர்தல் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடுவார் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.