மக்களை தூக்கி நிமிர்த்துவதற்கு எந்த நேரத்திலும் எந்த முடிவினையும் எடுப்பேன் – பிள்ளையான்

வரலாற்றில் மிகவும் கஸ்டப்பட்டுவந்த மக்களை தூக்கி நிமிர்த்துவதற்கு எந்த நேரத்திலும் எந்த முடிவினையும் எடுக்ககூடியவன் நான்.அதனால்தான் இவ்வளவு பிரச்சினைக்கும் மத்தியிலும் அரசாங்கத்துடன் நிற்கின்றேன் என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

விவசாயிகளின் நெல்லை கொள்வனவு செய்து அதனை அப்பகுதியில் உள்ள பொருளாதார நெருக்கடியில் வறுமை நிலையில் உள்ள மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் தேசிய திட்டத்தின் கீழான முதல் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

பொருளாதார நெருக்கடியில் வாழும் மக்களை நோக்காக கொண்டு ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ள திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 10151 குடும்பங்களுக்கான இரண்டு மாதங்களுக்கு தேவையான 20கிலோ அரிசிகள் இன்று வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

மட்டக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்தில் இது தொடர்பான நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஆரம்பித்துவைத்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன், கடந்த காலத்திலிருந்த மோசமான சூழ்நிலையிலிருந்து நாடு எழுந்துவருகின்றபோது வறுமையில் வாழும் மக்கள் தங்களை தாங்களே கட்டியெழுப்பிச்செல்வதற்கான ஒரு சந்தர்ப்பத்தினை உருவாக்கவேண்டும் என்று அரசாங்கம் மிக கடுமையான உழைத்துக்கொண்டிருக்கும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் 53கோடிரூபா நிதியானது ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது இந்த மாதமும் அடுத்தமாத்திற்கும் நெல் கொள்வனவு செய்து அரசியினை வழங்குவதற்கு.

அரசாங்கம் பணிக்கும் கடமைகளை செய்துவழங்கு என்பதை மாவட்ட அரசியல்வாதிகள்,அதிகாரிகள் என்ற நிலையில் ஏற்று கடமையாற்றவேண்டும்.அரசாங்கம் பாரிய செலவினை செய்துள்ளது இந்த அரசி வழங்கலுக்காக.மக்கள் இதனை முதலீடாக கொண்டு வேறு தொழில்களை முன்னெடுக்கவேண்டும்.

எனக்கு தனிப்பட்ட ரீதியாக நிவாரணங்கள் வழங்குவதில் உடன்பாடு இல்லை.எனினும் ஏழ்மையான மக்களுக்கு நிவாரணமும் தேவை ஊக்குவிப்பும் தேவை,அதனைவிட அவர்களுக்கு ஊக்கம் தேவை.

ஊக்கமானவர்கள்முயற்சிகளை மேற்கொண்டு உழைக்கவேண்டும்.சில இடங்களில் அதிகமான நிவாரணங்கள் காரணமாகவும் மக்கள் சோம்பேறிகளாக்கப்பட்டுள்ளார்கள்.நிவாரணம் மக்களை சோம்பறியாக்கினால் இந்த மாவட்டத்தினை கட்டியெழுப்பமுடியாத நிலைக்கு செல்லும்.

அரச அதிகாரிகள் மற்றவர்களை பதற்றப்படுத்தாமல் இங்குவந்து மக்களுக்கு சேவையாற்றவேண்டும்.எனக்கு தரப்பட்ட அதிகாரத்தில் யாரையும் விளையாட அனுமதிக்கமாட்டேன்.மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய வாக்கினால் மக்களால் தெரிவுசெய்ய்பபட்டவன் நான்.அந்த ஆணையை கபளீகரம் செய்வதற்கு அனுமதிக்கமாட்டேன்.

வரலாற்றில் மிகவும் கஸ்டப்பட்டுவந்த மக்களை தூக்கி நிமிர்த்துதற்கு எந்த நேரத்திலும் எந்த முடிவினையும் எடுக்ககூடியவன் நான்.அதனால்தான் இவ்வளவு பிரச்சினைக்கும் மத்தியிலும் அரசாங்கத்துடன் நிற்கின்றேன்.அரசாங்கம் எனக்கு தந்துள்ள பதவினையும் அதிகாரத்தினையும் பயன்படுத்தாமல்செல்வேன் என நினைத்தீர்கள் என்றால் அது உங்களது பிழையான கணிப்பாகத்தான் இருக்கும்.

அதனை எனக்கு நீங்கள் சொல்லித்தர தேவையில்லை.சுற்றுநிரூபங்களையும் தலைவரினால் பணிக்கப்பட்ட விடயங்களையும் செய்வதற்கு பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.

பிள்ளையான் இருக்கும் காலத்தில் நீங்கள் வேலைசெய்யவேண்டும்,இல்லையென்றால் இடமாற்றம் பெற்றுச்செல்லமுடியும்.நான் மிகவும் கஸ்டப்பட்டு துன்பப்பட்டு இந்த இடத்திற்கு வந்துள்ளேன்.எங்களது நல்லெண்ணத்தை பிழையாக கணிப்பிடவேண்டாம்.

கொரனாவும் அரசியல் ரீதியான முடிவுகளும் ஐரோப்பாவில் ஏற்பட்ட யுத்த நிலைமையும் மிகமோசமான நிலைமையினை காட்டிவிட்டுச்சென்றுள்ளது.இந்த சூழ்நிலையிலிருந்து மீள்வதற்கு நாடு படிப்படியாக முன்னேறிவருகின்றது.

கிராமிய பொருளாதாரத்தினை நம்பியிருக்கின்ற மக்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தினை இந்த உலகம் உருவாக்கிக்கொடுத்துள்ளது.உழைக்கும் மக்கள் தமது உற்பத்தியை அதிகரித்தால் அதற்கான கொள்வனவுத்திறன் உலகில் அதிகரித்துள்ளது.நீங்கள் உழைப்பினை அதிகரிக்கும்போது அதன்பெறுமதி இரட்டிப்பாகும் வாய்ப்புகள் உள்ளது.

இன்றுள்ள நிலைமையினை சிந்திக்காமல் எதிர்கால சமூகம் தொடர்பில் சிந்தித்து மாவட்டத்தினை முன்னேற்றக்கூடிய வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.அரசியலுக்கு அப்பால் கிழக்கு மாகாணத்தின் பொருளாதார இருப்புக்காக செயலாற்ற முன்வாருங்கள் என்ற அழைப்பினை விடுக்கின்றேன்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.