சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பியுங்கள் – ஹர்ஷ டி சில்வா அரசாங்கத்திடம் வலியுறுத்தல்

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்காமல், நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் இறுதி தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பை நாடாளுமன்றத்துக்கு வழங்க முடியாது, ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிபந்தனைகளைத் தெரிந்துகொள்ளும் உரிமை நாட்டு மக்களுக்கு உண்டு, ஆகவே, ஒப்பந்தம் கைச்சாத்திட முன்னர் அறிக்கையை அரசாங்கம் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா அரசாங்கத்திடம் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கலால் சட்டங்கள் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைப்பதில் சாதக தன்மை காணப்படுவதால் எதிர்க்கட்சிகள் கலக்கமடைந்துள்ளன என அரசாங்கம் குறிப்பிடுகின்றமை முறையற்றதாகும்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் தவறான பொருளாதாரக் கொள்கையால் நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. ஆகவே உடனடியாக சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டும் என 2020 ஆம் ஆண்டு நாங்கள் தான் ஆரம்பத்தில் குறிப்பிட்டோம்.

நாட்டைப் பொருளாதார ரீதியில் நெருக்கடிக்குள்ளாக்கி அரசியல் செய்ய வேண்டிய தேவை எமக்குக் கிடையாது. பொருளாதார மீட்சிக்காக அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களுக்கு நாடாளுமன்றத்தின் ஊடாக ஒத்துழைப்பு வழங்குவோம் என பலமுறை குறிப்பிட்டுள்ளோம், ஆனால் அரசாங்கம் நாடாளுமன்ற தெரிவுக் குழுக்களில் எதிர்தரப்பினருக்கு இடமளிக்காமல், ஆளும் தரப்பினருக்கு இடமளித்து, ஆரம்பத்தில் செயற்பட்டதைப் போன்று முறையற்ற வகையில் செயற்படுகிறது.

கடன் மறுசீரமைப்பு வெற்றிபெற்றுள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறோம், சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் இறுதித் தீர்மானத்தை நாடாளுமன்றம் தீர்மானிக்க வேண்டும் என்று குறிப்பிடுகின்றமையை ஏற்றுக்கொள்ள முடியாது, ஏனெனில் அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ள நிபந்தனைகள் மற்றும் ஒப்பந்தம் ஆகியன இதுவரை நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவில்லை.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டதன் பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிபந்தனைகளை முழுமையாக செயற்படுத்தாவிட்டால் பாரிய நெருக்கடிகள் ஏற்படும். உலகில் பல நாடுகள் அவ்வாறான பிரச்சினைகளைத் தற்போது எதிர்கொண்டுள்ளன.

ஆகவே ஒப்பந்தம் கைச்சாத்திட முன்னர் ஒப்பந்தம் நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டும்,அதனை விடுத்து அறிக்கையை சமர்ப்பிக்காமல் நாடாளுமன்றம் இறுதித் தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

நாட்டின் நிதி அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு உண்டு, ஆகவே, சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். அத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிபந்தனைகள் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளும் உரிமை நாட்டு மக்களுக்கு உண்டு. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.