“நிம்மதியாக வீடுகளில் தூங்கி பல மாதங்கள் ஆகின்றன” – அம்பாறையில் யானை அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்ட மக்கள்
நிம்மதியாக வீடுகளில் தூங்கி பல மாதங்கள் ஆகின்றன. வீதிகளில் இறங்கி போராடுவதை தவிர இனி வேறு வழியில்லை என அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கண்ணகி கிராமம், கவாடப்பிட்டி, புளியம்பத்தை, மகாசக்திபுரம் உள்ளிட்ட கிராமங்களில் வாழும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த கிராமங்களில் யானையின் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் அங்கு வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து இன்று (9) வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே இவ்வாறு கூறினர்.
கோளாவில் பிரதேசத்தில் இருந்து பல்வேறு சுலோக அட்டைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக விழிப்புணர்வு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்த மக்கள், ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் முன்பாக ஒன்று திரண்டு பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
அதன் பின்னர் அரச உயர் அதிகாரிகளுக்கும், வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளுக்கும் கையளிக்கும் வகையிலான மகஜர்களை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரனிடம் ஒப்படைத்துள்ளனர்.
அத்தோடு தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குரிய தீர்வினை விரைவில் பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தனர்.
இதன்போது மகஜர்களை பெற்றுக்கொண்ட பிரதேச செயலாளர் அந்த மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இதேவேளை கண்ணகி கிராமத்தில் நாளாந்தம் யானை தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுவரும் நிலையில் இன்று அதிகாலையும் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டை உடைத்து சேதப்படுத்தியுள்ளது.
அத்தோடு இரண்டு தினங்களுக்கு முன்னர் கண்ணகி கிராமத்திலும் உள்ள குடியிருப்பு பகுதிகள், பயிரிடப்பட்ட பயிரினங்கள் மற்றும் உடைமைகளை யானை துவம்சம் செய்துள்ளது.
அண்மைக்காலமாக கவடாப்பிட்டி, புளியம்பத்தை, மகாசக்திபுரம், கண்ணகி கிராமம் உள்ளிட்ட அயலில் உள்ள சிறு கிராமங்களிலும் யானைகளின் தொல்லை அதிகரித்து வருவதனால், அங்கு வாழும் மக்கள் தூக்கத்தை தொலைத்து வீதிகளில் அலைவதுடன் விவசாயிகளும் அச்சத்தில் உறைந்துபோயுள்ளனர்.
அதேவேளை சில மாதங்களுக்கு முன்னர் கண்ணகி கிராமத்தில் யானையின் தாக்குதலுக்குள்ளாகி பெண்ணொருவர் பலியானதுடன், வயல் பிரதேசத்தில் தாக்கப்பட்ட ஆண் ஒருவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
யானை தாக்குதல் சார்ந்து மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், இவ்விடயத்தை அரசியல்வாதிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றபோதும், அரசாங்கமோ எந்தவொரு அரசியல்வாதியோ இதுவரை எத்தகைய நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, அப்பகுதிகளில் யானைத் தாக்கம் குறித்த அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், ஒற்றைக்கண் யானை ஒன்றே தொடர்ச்சியாக சேதங்களை ஏற்படுத்தி வருவதாகவும் கூறியுள்ளனர்.
ஆகவே, அந்த ஒற்றைக்கண் யானையினை அப்பிரதேசங்களிலிருந்து வெளியேற்ற அரசாங்கமும் வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். இல்லையேல், நாங்கள் தொடர்ந்தும் வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபடவேண்டியதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை