ஜோசப் முகாம் சித்திரவதைகள் தொடர்பில் மேஜர் ஜெனரல் குலதுங்கவிடம் கேள்வி எழுப்புங்கள் – ஐ.நா மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவிடம் பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தல்

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் குலதுங்கவிடம் ஜோசப் முகாமில் அவரது வகிபாகம் என்னவென்பது தொடர்பாகக் கேள்வி எழுப்பப்படவேண்டும் என்று பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்றக்குழுவின் தலைவருமான எலியற் கொல்பேர்ன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின்கீழ் இயங்கும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயம் தொடர்பான மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவின் இலங்கை தொடர்பான 6 ஆவது மீளாய்வுக்கூட்டம் 08, 09 ஆம் திகதிகளில் ஜெனீவாவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இலங்கையின் சார்பில் நிகழ்நிலை முறைமையின் ஊடாகக் கலந்துகொண்ட பிரதிநிதிகள் குழுவில் மேஜர் ஜெனரல் ஜீவக ருவன் குலதுங்கவும் உள்ளடங்குகின்றார்.

அவர் கடந்த 2016 நவம்பர் 7 – 2017 ஜுலை 27 வரையான காலப்பகுதியில் ஜோசப் முகாமில் இடம்பெற்ற சித்திரவதைகளுடன் தொடர்புபட்டிருக்கிறார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

அவர் இலங்கை பிரதிநிதிகள் குழுவில் உள்வாங்கப்பட்டுள்ளமை தொடர்பில் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்றக்குழுவின் தலைவருமான எலியற் கொல்பேர்ன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பவை வருமாறு –

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் குலதுங்க ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவின் இலங்கை தொடர்பான மீளாய்வில் நிகழ்நிலை முறைமையின் ஊடாகப் பங்கேற்றமை தொடர்பாக எனது தீவிர கரிசனையை வெளிப்படுத்துகின்றேன்.

பாலியல் வன்முறைகளும், தொடர்ச்சியான சித்திரவதைகளும் பதிவான ஜோசப் முகாமில் கடந்த 2016 நவம்பர் 7 – 2017 ஜுலை 27 வரையான காலப்பகுதியில் மேஜர் ஜெனரல் குலதுங்க கட்டளைத் தளபதியாகப் பணியாற்றினார்.

இந்தக் காலப்பகுதியில் ஜோசப் முகாமில் இடம்பெற்ற சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டோரில் சிலர் இப்போது லண்டனில் வசிக்கும் நிலையில், அவர் ஐ.நா. மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவின் கூட்டத்தில் பங்கேற்றிருக்கின்றமை கடும் சினத்தைத் தோற்றுவித்துள்ளது.

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர், ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டங்களில் உள்வாங்கப்படுவதை கவனிக்காமல் இருக்கமுடியாது. எனவே, கடந்த 2016 ஆம் ஆண்டு சித்திவதைகளுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் குழுவினால் சிசிர மென்டிஸிடம் கேள்வி எழுப்பப்பட்டதைப்போன்று, இம்முறை குலதுங்கவிடம், ஜோசப் முகாமில் அவரது வகிபாகம் தொடர்பாகக் கேள்வி எழுப்பப்படவேண்டும் என்று அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.