நீதிமன்றத்துக்கு அப்பாற்பட்ட வகையில் எவரும் செயற்பட முடியாது – டிலான் பெரேரா
உயர் நீதிமன்றத்தின் இடைக்கால தடை உத்தரவால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அது முற்றிலும் தவறானது. ஜனநாயகத்துக்கு எதிரான அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை பிறப்பித்துள்ளது. நீதிமன்றத்துக்கு அப்பாற்பட்ட வகையில் எவரும் செயற்பட முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சர்வஜன வாக்குரிமை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –
பொருளாதாரப் பாதிப்புக்கு மத்தியில் தேர்தல் நடவடிக்கைகளுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. நாட்டின் நிதி நெருக்கடிகளுக்கு தீர்வு காண முன்னுரிமை வழங்க வேண்டும் என அரசாங்கம் குறிப்பிடுகிறது.
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு நாட்டு மக்கள் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் குறிப்பிடுவது நகைப்புக்குரியது.
நாட்டு மக்கள் மாத்திரமா அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும், அரசாங்கம் அர்ப்பணிப்புடனும், விட்டுக்கொடுப்புடன் செயற்படக் கூடாதா?
பொருளாதாரப் பாதிப்புக்கு மத்தியில் அமைச்சரவை அமைச்சுக்களின் எண்ணிக்கை வரையறுக்கப்படவில்லை, அமைச்சுக்களுக்கான வரபிரசாதங்களும் மட்டுப்படுத்தப்படவில்லை, இவ்வாறான பின்னணியின் தேசிய சபை தொடர்பில் தற்போது பேச்சுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பொருளாதார மீட்சிக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்கிறார்களா, இல்லையா என்பதை அரசாங்கம் தெரிந்துகொள்ள வேண்டுமாயின் தேர்தல் நடத்த வேண்டும். மக்களின் அபிலாஷைகளுக்கு அமைய அரச நிர்வாகத்தை மேற்கொள்ளும் நோக்கம் இந்த அரசாங்கத்துக்குக் கிடையாது,
தேர்தல் ஒன்று இடம்பெற்றால் ஒன்று எதிர்க்கட்சி வெற்றிப்பெறும்,அல்லது ஆளும் கட்சி வெற்றிபெறும், தற்போதைய நிலையில் நாட்டில் எந்த தேர்தல் இடம்பெற்றாலும் முதல் மூன்று நிலைகளை எதிர்க்கட்சிகள் கைப்பற்றும், நான்காவது நிலையை அரசாங்கம் கைப்பற்றும் என ஏற்றுக்கொள்ளக்கூடிய நிறுவனங்கள் கருத்துக்கணிப்பு மதிப்பீட்டை வெளியிட்டுள்ளன.
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்கான நிதி விடுவிப்புக்கான தடையை உயர்நீதிமன்றம் நீக்கியுள்ளதால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக ஆளும் தரப்பின் உறுப்பினர் பிரேம்நாத் சி. தொலவத்தே நாடாளுமன்றத்தில் சிறப்புரிமை தொடர்பான பிரேரணை சமர்ப்பித்துள்ளமை முற்றிலும் தவறானது.
நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் உரிமை உயர்நீதிமன்றத்துக்கு உண்டு, ஜனநாயகத்துக்கு எதிரான அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.
உயர்நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையுத்தரவை நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை என்ற வரையறைக்குள் உள்ளடக்க முடியாது, நீதிமன்றத்துக்கு அப்பாற்பட்ட வகையில் எவரும் செயற்பட முடியாது என்பதை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை