வீதிப் போராட்டங்களால் ஆட்சியை மாற்ற முடியாது : நாட்டின் பொருளாதாரமே சீர் குலையும் – சாந்த பண்டார
நாட்டை கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தில் சகல தரப்பினரும் இணைந்து கொள்ளவேண்டும். வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப நாட்டு மக்கள் உட்பட அனைவரும் ஒன்றுபட வேண்டும்.
வீதி போராட்டங்களால் ஆட்சியை மாற்ற முடியாது. மாறாக, நாட்டின் பொருளாதாரமே சீர் குலையும் என ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில் –
நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் தற்போது எமக்கு உள்ள பொறுப்பு வங்குரோத்து அடைந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதாகும்.
அதற்கானதொரு அடித்தளத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உருவாக்கியுள்ளார். அதற்கேற்பவே வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. மேலும் அதன் பிரதிபலன்கள் தற்போது அடையப்பெற்று வருகின்றன.
நாட்டில் தற்போது அரச செலவுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அரச வருமானங்கள் அதிகரிப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இறக்குமதிகள் இயலுமானவரை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்றுமதி வருமானங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த ஜனவரி மாதம் மாத்திரம் ஒரு கோடி டொலர் ஏற்றுமதி மூலம் வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளது.
எதிர்காலத்திலும் ஏற்றுமதிகளை அதிகரித்து இறக்குமதிகளைக் கட்டுப்படுத்தி வருமானங்களை பெற்றுக்கொள்ள முடியும்.
இதேவேளை, அரச சேவைகளுக்கு புதிய நியமனங்கள் வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளோம். செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டிய நிலை உள்ளது. மின்சார கட்டணங்கள் உயர்த்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
வரிக்கொள்கைகள் தொடர்பிலும் சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும் அதில் சில குறைகள் காணப்பட்ட போதிலும் குறுகிய காலப்பகுதிக்குள் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டு அதன்பின்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவோம். அதுவரையில் சற்று பொறுத்திருக்க வேண்டும்.
அமெரிக்கா, சீனா, இந்தியா, ஜப்பான், பாரிஸ் கிளப் நாடுகளின் உதவிகள் எமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவியும் கிடைக்கவுள்ளது. குறிப்பாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளது. நாம் முன்னர் இருந்த வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு மீட்சி நிலையை நோக்கி செல்கிறோம்.
இது தனி நபர் ஒருவரால் பெறப்பட்ட வெற்றியல்ல. நாட்டு மக்கள் என்ற வகையில் நாம் அனைவரும் பெற்ற வெற்றியாகும். இருப்பினும் நாம் வெற்றியின் இறுதிப் பகுதிக்கு செல்லாத போதிலும், அதற்கான ஆரம்பமாக இதைக் குறிப்பிடலாம்.
நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது. நாம் ஒன்றாக முன்னோக்கி செல்லவில்லை என்றால் மீண்டும் ஆரம்ப இடமான வங்குரோத்து நிலைக்கே செல்ல வேண்டி ஏற்படும்.
இந்நிலையில், மீண்டெழும் பொருளாதாரத்தைச் சீர் குலைக்கும் விதமாக வீதிகளில் இறங்கியும், வீதிகளை மறித்தும் போராட்டங்களை மேற்கொள்ள வேண்டாம். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் சுற்றுலாத்துறை பாதிக்கப்படும். சுற்றுலாப் பயணிகள் அசௌகரியங்களுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படும். அவர்களின் வருகை குறைவடையும்.
அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கவில்லை என்றாலும் பறவாயில்லை. இவ்வாறானதொரு தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபடவேண்டாம். ஜனாதிபதி முன்னெடுத்துள்ள வேலைத் திட்டங்களை நிறைவேற்ற குறைந்தது இன்னும் ஒருவருடத்தையேனும் வழங்குங்கள். மேற்படி காலப்பகுதிக்குள் நெருக்கடிகளை இல்லாது செய்து பழைய நிலைக்கு நாட்டை கொண்டு செல்லலாம். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை