தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்ட குழு மோதலே யாழ். மாநகர நிர்வாகத்தை சீர்குலைத்தது! பா.கஜதீபன்

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்ட குழு மோதலே, யாழ்.மாநகர நிர்வாகத்தை சீர்குலைத்தது. கரைச்சி பிரதேசசபைக்குள் சுமந்திரன் நுழைந்து விட்டார் என்ற கோபத்தில், சிறிதரன் யாழ். மாநகரசபைக்குள் தலையிட்டுள்ளார் என வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டவை வருமாறு –

சொலமன் சிறிலை ஒரு வாரம் முதல்வராக அறிவித்தது மக்களை ஏமாற்றும் தேர்தல் நாடகம். சிறிலுக்கு உரிய கௌரவமளிக்க வேண்டுமென்றால், உள்ளூராட்சி தேர்தலில் அவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க திராணியுள்ளதா என சிறிதரனிடம் சவால் விடுக்கிறேன்.

யாழ்ப்பாணம் மாநகரசபையில் இலங்கைத் தமிழ் அரசு கட்சியால் நியமிக்கப்பட்ட ஒரு வார முதல்வர் வேட்பாளரை பிற கட்சிகள் ஆதரிக்காமல் விட்டன, அரசியல் விரோதம் – பழிவாங்கும் எண்ணம் காரணமாகவே என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழ் அரசு கட்சிக்குள் ஏற்பட்ட உட்கட்சி குழப்பத்தினால்தான் யாழ்ப்பாணம் மாநகரசபையில் முதலாவது குழப்பம் ஏற்பட்டது, அப்போதைய முதல்வர் ஆர்னோல்ட் பதவி விலக வேண்டியேற்பட்டது.

குறைந்த பட்சம் அன்றாடம் பத்திரிகை வாசிப்பவர்களுக்குக் கூட இந்த தகவல்கள் தெரியும். தமிழ் அரசு கட்சிக்குள் இரண்டு அணிகள் மல்லுக்கட்டிக் கொண்டிருப்பது, இப்பொழுது பேஸ்புக்கில் உள்ள அனைவருக்கும் தெரியும்.

கடந்த சில வருடங்களாகத் தமிழ் அரசு கட்சியினர் பேஸ்புக்கில் அந்த சண்டை மட்டும்தான் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். யாழ்.மாநகரசபையில் தமிழ் அரசு கட்சியின் மற்றொரு எம்.பி, எம்.ஏ.சுமந்திரன் ஏற்படுத்திய குழப்பங்களின் போது, சிறிதரன் கோமா நிலையில் இருந்தாரா என்ற கேள்வியெழுகிறது.

அப்போது என்ன காழ்ப்புணர்ச்சியில், குரோதத்தில் தமிழ் அரசு கட்சி தனது தலையில் தானே மண்ணள்ளி போட்டது? இப்பொழுது சிறிதரன் திடீரென விழித்து, தமிழ் அரசு கட்சியின் 70 வருட வரலாற்றை கூறும் சிறிதரன், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எதிரணிகள் சிறிலை ஆதரிக்கவில்லையெனக் கூறுவது, அவருக்கு யாழ். மாநகரசபையில் கடந்த 5 வருடங்களாக என்ன நடந்தது என்பதே தெரியவில்லையென்பதையே காண்பிக்கிறது.

சொலமன் சிறில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர். சிறிதரன் அரசியலுக்கு வருவதற்கு முன்னரே- 2004 நாடாளுமன்ற தேர்தலில் சொலமன் சிறிலின் வெற்றிக்காக நாம் செயற்பட்டோம். அது சொலமன் சிறிலுக்கும் தெரியும். சொலமன் சிறில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், தமிழ்த் தேசியப் பரப்பில் செயற்பட்டவர் என சிறிதரனிற்கு திடீர் ஞானம் ஏற்பட்டு, ஒரு வார முதல்வர் வேட்பாளராகப் பிரேரித்துள்ளார்.

குறைந்தபட்சம் அவரை மாகாணசபை உறுப்பினராக அல்லது யாழ். மாநகர முதல்வராக ஆக்க எந்த முயற்சியும் செய்யாமல் இருந்து விட்டு, இப்பொழுது ஒரு வார முதல்வருக்கு அவரது பெயரை பிரேரித்தமை தமிழ்த் தேசியத்தின் பெயரால் மக்களை ஏமாற்றும் அரசியல் நாடகம்.

சிறிலுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டுமென சிறிதரன் நினைத்தால், அடுத்த யாழ். மாநகரசபையின் முதல்வர் வேட்பாளர் அவர்தான் என பகிரங்கமாக அறிவிக்கும் திராணி சிறிதரனிடம் உள்ளதா? ஆர்னோல்ட் படித்தவர், பொங்குதமிழ் நடத்தியவர் என சிறிதரன் குறிப்பிட்டார்.

ஆர்னோல்ட்டை தோற்கடித்தது எதிர்க்கட்சிகளல்ல. இலங்கைத் தமிழ் அரசு கட்சியின் மாநகரசபை உறுப்பினர்களே அவரைத் தோற்கடித்தனர்.

மாநகரசபையில் குழப்பம் ஆரம்பித்த போது, தமிழ் அரசுக் கட்சி உட்கட்சி குழப்பத்தை மாநகரசபைக்கு கொண்டு வந்து, நிர்வாகத்தைக் குழப்பக்கூடாது என கடந்த சில வருடங்களாக நாங்கள் திரும்பத்திரும்பக் கூறி வருகிறோம்.

அப்போதெல்லாம் கோமாவில் இருந்த சிறிதரன், தேர்தல் வரப்போகிறது என்றதும், தமிழ்த் தேசியம் பேசிக்கொண்டு விழித்தெழுந்துள்ளார். எமக்கு இப்பொழுதுள்ள சந்தேகம், சிறிதரன் இப்படி சொன்னது சுமந்திரனுக்கு தெரியுமா என்பதே.

அவரது கட்சிப் பிரச்சினைகளிற்குள் நாம் தலையிடவில்லை, சிறிலை ஆதரிக்கவில்லையென்றதும் திடீர் தேசியம் பேசும் சிறிதரன், தனது கடந்த காலத்தையும் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

கடந்த உள்ளூராட்சிசபை தேர்தலில் தமிழ் அரசு கட்சி தலைமையின் அறிவுறுத்தலையும் மீறி, பங்காளிக்கட்சிகளின் வேட்பாளர்களை இணைக்காமல் வேட்புமனு தாக்கல் செய்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து செல்கிறோம், தனித்து நின்று வெற்றி பெறுவோம் என்றெல்லாம் சுமந்திரன் இதுவரை கூறிய போதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்கும் விதமாக செயற்பட்ட போதெல்லாம் வாய் திறந்து ஒரு வார்த்தை பேசாமலிருந்தவர் சிறிதரன்.

அப்போதெல்லாம், அன்ரன் பாலசிங்கத்துக்கு நிகரானவர் என பாராட்டிக் கொண்டுமிருந்தவர். இப்பொழுது தமிழ் அரசு கட்சிக்குள் சுமந்திரனுடன் ஏற்பட்ட மோதலே, சிறிதரன் திடீரென யாழ். மாநகரசபையில் தலையிட காரணம். கிளிநொச்சியின் கரைச்சி பிரதேசசபைக்கு சுமந்திரன் ஓர் அணியை களமிறக்கி விட்டார் என்ற கோபத்தில், ஏட்டிக்குப் போட்டியாக யாழ். மாநகரசபையில் தலையிட்டுள்ளார் என்பதே உண்மை.

அவரது கட்சிப் பிரச்சினைகளுக்குள் எம்மை இழுக்க வேண்டாமென சிறிதரனிடம் அன்பாக கேட்டுக் கொள்கிறோம். போலித் தமிழ் அரசு கட்சியினர் யாழ்ப்பாணம் மாநகரசபையில் மட்டுமல்ல, வடக்கு கிழக்கில் உள்ள எந்த சபையிலும் ஆட்சியமைக்க முடியாது என்பதே யதார்த்தம். – எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.