சிங்களவருக்கு ஒரு சட்டம் தமிழருக்கு ஒரு சட்டமா! கோ.ராஜ்குமார் கேள்வி

தமது போராட்டத்தை மழுங்கடிக்க அடுத்த முயற்சிதான் இந்த மின்சார துண்டிப்பு என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் மேற்கொண்டு வரும் கொட்டகைக்கு சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தைப் பெற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த வியாழக்கிழமை வவுனியா மாவட்ட தமிழர் தாயக சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பில் வினவியபோதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி தாய்மாரால் சுழற்சி முறையில் வவுனியா – ஏ9 வீதியில் உள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த கொட்டகை அமைந்துள்ள வீதி, மின் கம்பத்தில் பொருந்தப்பட்டிருந்த மின் விளக்கு இணைப்பு மூலம் மின்சாரம் பெறப்பட்டு போராட்ட கொட்டகைக்கு வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கொழும்பில் இருந்து வந்த மின்சார சபையினர், சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றதாக தெரிவித்து போராட்ட கொட்டகையில் இருந்த தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதாக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

2210 ஆவது நாளாக வவுனியாவில் இரவு பகலாக போராட்ட பந்தலில் சுழற்சி முறையில் போராட்டம் மேற்கொண்டு வருகின்றோம்.

வயது முதிர்ந்த தாய்மார் இங்கு போராட்டத்தை மேற்கொண்டு வந்தனர். எனவே அப்போதைய வடமாகாண சபை முதலமைச்சராக இருந்த விக்னேஸ்வரன், வவுனியா நகரசபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் இருந்ததால் வவுனியா நகரசபைக்கு அறிவித்து மின்சார சபைக்கு தகவல் வழங்கியே மின்னிணைப்பை ஏற்படுத்தித் தந்தார்கள்.

அதன் பின்னர் இரண்டு முறை மின்பழுது ஏற்பட்டபோது கொழும்பிலிருந்து நேரடியாக மின்சாரசபைக்கும் அறிவித்து உடனடியாக செய்து கொடுக்குமாறு தெரிவிக்கப்பட்டு மின்குமிழ்களையும் வழங்கி மின்னிணைப்பை மீள சரிசெய்து தந்தார்கள்.

சட்டவிரோதமாக மின்னிணைப்பை பெற நாங்கள் முயற்சி செய்யவில்லை.

அவர்களே மின்சாரத்தை தந்துவிட்டு சட்டவிரோதம் என கூறி வவுனியா மாவட்ட தமிழர் தாயக சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதாவை கடந்த வியாழக்கிழமை கைது செய்த நிலையில் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோது சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த வழக்கு திகதியை மே மாதத்துக்கு ஒத்திவைத்துள்ளனர்.

இலங்கை அரசாங்கத்தோடு சேர்ந்து இயங்குகின்ற பெருந்தொகையான அமைச்சர்களுடைய கோடிக்கணக்கான மின்சார நிலுவைகள் உள்ளன. அவர்களுக்கு மின்துண்டிப்பு ஏற்படுத்தவில்லை.

இங்கே குறைந்தளவிலான மின்குமிழ்களை பாவித்திருந்தோம். அரசாங்கமே மின்சாரத்தைத் தந்துவிட்டு ஏன் நிறுத்தி வைத்திருக்கிறது.

காலிமுகத்திடலில் அதிகமானோர் மின்சாரம் பாவிக்கும் போது அரசாங்கம் எங்கு இருந்தது.

சிங்களவருக்கு ஒரு சட்டம் தமிழருக்கு ஒரு சட்டமா? அதனால்தான் நாங்கள் வெளிநாடுகளை கூப்பிடுகின்றோம்.

அவர்கள் வந்தால் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளை கண்டுபிடிக்கலாம், தமிழ் இறையாண்மை ஒன்று இருந்தால் பிள்ளைகளை கண்டுபிடிக்கலாம்.

இங்கே இருக்கின்ற அனைத்து கட்டமைப்புகளும் எந்த நீதியுமே தமிழர்களுக்கு கிடைப்பதில்லை. எல்லாமே அநீதியே கிடைக்கின்றது. மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருட்டிலே தாய்மார்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

தினமும் இரவுகளில் பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்தப்படுகின்றன. அவ்வாறான இன்னல்களுக்கு மத்தியிலே போராடி வருகின்றோம்.

ஒவ்வொரு விடயமும் இலங்கை அரசாங்கத்துக்கு தெரியாமல் இல்லை. ஒவ்வொரு விடயமும் தெரியும். எவ்வளவு நெருக்கடிகளைத் தந்துவிட்டார்கள். அப்படி இருந்தும் எமது போராட்டத்தை நாங்கள் கைவிடுவதாக இல்லை. அதை நிறுத்த இவர்களின் அடுத்த முயற்சிதான் இந்த மின்சார துண்டிப்பு.

இலங்கை அரசாங்கம் எந்தவொரு ரீதியிலும் எங்களுக்கான தீர்வைத் தராது என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

நீதிக்காகப் போராடுகின்ற ஒரு தாய், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த காலத்தில், பிள்ளையின் ஆதாரத்தை காட்டியும் அவருக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை.

குற்றவாளிகள் எல்லோரும் சுதந்திரமாக வெளியே இருக்கும் போது மின்சாரத்தை சட்டவிரோதம் எனக் கூறி பிள்ளையைத் தேடிக்கொண்டிருக்கின்ற தாயைக் கொண்டு போய் அடைப்பதிலே உங்களுடைய நீதித்துறை இருக்கிறது.

குற்றம் செய்தவர்களிடம் நீதியை எதிர்பார்க்க முடியாது. மூன்று வருடத்துக்கு முதல் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராகப் போராட்டம் மேற்கொண்டிருந்தோம்.

அவருடைய ஆதரவாளர்கள் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். அவர்களால் எனக்கு எதிராக கொலைவெறி தாக்குதல் மேற்கொண்டிருந்தார்கள்.

முழு ஆதாரங்களுடன் பொலிஸிடம் ஒப்படைத்திருந்தோம்.

அவ்வாறு இருக்க, கைது செய்ய வேண்டியவர்களை கைது செய்யாமல் வெளியே விடுவித்துவிட்டு பாதிக்கப்பட்டு நீதி கேட்கின்றவர்களை தண்டிக்கிறார்கள்.

மின்சாரத்தை தந்தவர்கள் மின்சார சபையே. அவர்கள் குற்றவாளியாக இருந்து கொண்டு எங்களை கொண்டு சென்று அடைக்கின்றார்கள் என்றால் என்ன நியாயம்.

சமூகத்தின், இனத்தின் ஆதரவோடு இருக்கும் போராட்டங்களுக்கு மின்சாரத்தை நிறுத்துவது சட்டவிரோதமானது. நீங்கள் செய்வதே அநீதியானது.

கடந்த 2017ஆம் ஆண்டு முதல் குறித்த போராட்டம் கொட்டகை அமைத்து இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.