நியாயமற்ற உயர் வரியறவீட்டு வீதம் வரி ஏய்ப்புக்கு வழிவகுக்கும் – நிபுணர்கள், புத்திஜீவிகள் எச்சரிக்கை
நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் வேளையில், ஒரே தடவையில் வரிவருமானத்தை 200 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு முற்படுவது பொருத்தமற்றதாகும். வரியறவீட்டு வீதம் நியாயமற்றவகையில் மிகவும் உயர்வாகக் காணப்படும்போது வரி ஏய்ப்பில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். இது பல்வேறு வழிகளிலும் நாட்டின் பொருளாதாரத்தை வெகுவாகப் பாதிக்கும் என்று துறைசார் நிபுணர்கள் மற்றும் புத்திஜீவிகள் எச்சரித்துள்ளனர்.
இலங்கைக்கு ஏற்றவாறான நியாயமானதும், வெளிப்படைத்தன்மை வாய்ந்ததும், பொறுப்புடன்கூடியதுமான வரியறவீட்டு முறைமை தொடர்பான 32 பக்கங்களைக்கொண்ட முன்மொழிவொன்று தொழில்சார் நிபுணர்களின் தொழிற்சங்கக்கூட்டணியால் வெளியிடப்பட்டுள்ளது.
பேராசிரியர் இந்திக கருணாதிலக, பேராசிரியர் அருண ஷாந்தாரச்சி, கலாநிதி ஹரித அளுத்கே, பேராசிரியர் அர்ஜுன பராக்கிரம, கலாநிதி சருடத்த இலங்கசிங்க, கலாநிதி மஞ்சுள ஹேரத், அனுபா நந்துல, மஞ்சுள சமரசிங்க, பிரசங்க ரணவத்த, கலாநிதி கசுன் குமாரகே மற்றும் மயூரி அமரசிறி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இந்த முன்மொழிவிலேயே மேற்கண்டவாறு எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
அதில் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு –
நாட்டில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வரியறவீட்டு முறைமை பெரும்பான்மையான ஊழியர்களுக்கு ஒரு சுமையாக மாறியிருக்கின்றது. ஏனெனில் அவர்களின் நிலையான வருமானத்தில் ‘இலாபமாக’ அமையக்கூடிய தொகை ‘வரியாக’ அறவிடப்படுகின்றது. வணிகங்களின் செலவினங்களைக் கருத்திற்கொள்ளாமல் அவர்களின் தேறிய வருமானத்தின்மீதும், ஊழியர்களின் ஏனைய செலவினங்களைக் கவனத்திற்கொள்ளாமல் அவர்களின் மொத்த வருமானத்தின்மீதும் வரி அறவிடப்படுகின்றது.
தற்போதைய வரியறவீட்டு முறைமை இந்த அடிப்படைக்கோட்பாடுகளை முற்றிலும் புறக்கணித்திருக்கின்றது. குறிப்பாக தற்போதைய முறைமையில் ‘செலவினச்சலுகை’ நீக்கப்பட்டுள்ளமை கவனத்திற்கொள்ளப்படவேண்டிய விடயமாகும். எனவே இந்த வரியறவீட்டு முறைமை நியாயமற்றதும், உரிய கோட்பாடுகளுக்கு முரணானதுமாகும்.
கடந்த 2019 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பெறுமதிசேர்வரிக்குறைப்பே அரசவருமான வீழ்ச்சிக்குப் பங்களித்த முக்கிய காரணியாகும். எனவே, இந்த இழப்பை ஈடுசெய்வதற்கு பொருத்தமற்ற முறையில் வருமானவரியை அறவிடுவதென்பது, அந்தத் திட்டம் தோல்வியடைவதற்கே வழிவகுக்கும்.
அதேபோன்று இவ்வாண்டு வரவு, செலவுத்திட்டப் பற்றாக்குறை 2.4 ட்ரில்லியன் ரூபாவென அரசாங்கம் மதிப்பிட்டிருக்கும் நிலையில், இந்த வருட இறுதியில் 1667 பில்லியன் ரூபா வருமானத்தை அடைந்துகொள்ளவேண்டுமென எதிர்பார்ப்பது நடைமுறைச்சாத்தியமற்ற விடயமாகும். நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் வேளையில், ஒரே தடவையில் வரிவருமானத்தை 200 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு முற்படுவது பொருத்தமற்றதாகும்.
வரியறவீட்டு வீதம் நியாயமற்றவகையில் மிகவும் உயர்வாகக் காணப்படும்போது வரி ஏய்ப்பில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். இது பல்வேறு வழிகளிலும் நாட்டின் பொருளாதாரத்தை வெகுவாகப் பாதிக்கும்.
எனவே, ஊழியர்களால் தாங்கிக்கொள்ளக்கூடிய வரியறவீட்டு வீதத்தை நடைமுறைப்படுத்தல், சிறிய – நடுத்தரளவிலான வணிக முயற்சிகள் மற்றும் விவசாயம் போன்ற விசேட துறைகளுக்குரிய சலுகைத் திட்டங்களை அறிமுகப்படுத்தல் போன்ற குறுங்கால நடவடிக்கைகளையும், அதிகரித்த வரியறவீட்டுக்குப் பதிலாக வரியறவீட்டுத்தளத்தை விரிவுபடுத்தல், வெளிப்படைத்தன்மை மற்றும் செயற்திறனை அதிகரிக்கும் வகையில் வரியறவீட்டு செயன்முறையை டிஜிற்றல்மயப்படுத்தல், சுயாதீன வரியறவீட்டு ஆணைக்குழுவை ஸ்தாபித்தல், திருடப்பட்ட (மோசடி செய்யப்பட்ட) சொத்துக்களை மீளப்பெறுவதற்கான சட்டநடவடிக்கையை முன்னெடுத்தல் போன்ற நடுத்தரகால நடவடிக்கைகளையும், பொருளியல் சூழ்நிலையை அடிப்படையாகக்கொண்ட ஆழமான ஆய்வின் பிரகாரம் பொருளாதாரக்கொள்கைகயைத் தயாரித்தல், வெளிப்படையானதும் பொறுப்புக்கூறும்தன்மைவாய்ந்ததுமான வரியறவீட்டுக்கொள்கையை உருவாக்கல் உள்ளிட்ட நீண்டகால நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்கவேண்டியது அவசியமாகும் என்று அந்த முன்மொழிவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை