வேளாங்கண்ணியிலிருந்து நியூசிலாந்துக்கு படகு மூலம் செல்ல முயன்ற இலங்கைத் தமிழ் அகதிகள் கைது
நாகப்பட்டினம்: வேளாங்கண்ணியில் இருந்து நியூசிலாந்துக்கு படகு மூலம் செல்ல முயன்றதாக 9 ஈழத்தமிழர்களை கியூ பிரிவு காவல்துறையினர் அண்மையில் கைது செய்திருக்கின்றனர். அவர்களிடமிருந்து 17 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு முகாம்களில் வசித்து வந்தவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
கியூ பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், வேளாங்கண்ணியிலும் அதன் அருகாமை பகுதியிலும் உள்ள ஹோட்டல்களில் தேடுதல் நடத்திய காவல்துறையினர் 9 பேரை கைது செய்துள்ளனர்.
இதில் முதலில் கைது செய்யப்பட்ட 6 அகதிகளிடம் நடத்திய விசாரணையில், மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரை சேர்ந்த நபரின் பதிவு செய்யப்படாத படகின் மூலம் அவர்கள் நியூசிலாந்துக்கு செல்ல முயன்றது தெரிய வந்திருக்கிறது.
இத்துடன் மற்றொரு லாட்ஜிலிருந்து வேறு வேறு முகாம்களை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு முகாம்களில் உள்ள அகதிகளை தொடர்புக்கொண்டு நியூசிலாந்தில் வேலை வாங்கித்தருவதாக பேசி வந்திருக்கின்றனர். அதன் மூலம் நியூசிலாந்துக்கு கடல் வழியாக செல்வதற்கான நபர்களை கண்டறிந்து வந்திருக்கின்றனர் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை