குற்றமிழைப்பவர்களின் சொத்துக்கள் அரசுடைமையாக்கப்படும் – வஜிர அபேவர்தன

அத்தியாவசிய பொதுச் சேவைச் சட்டத்தின் கீழ் (1979 ஆம் ஆண்டு இலக்கம் 61) குற்றமிழைக்கும் ஒவ்வொரு நபரின் அசையும் அல்லது அசையா சொத்துக்கள் அரசுடைமையாக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

அத்தியாவசியப் பொதுச் சேவைச் சட்டத்தின் கீழ் ஒரு குற்றமிழைத்து , நீதிமன்ற வழக்கு விசாரணையின் மூலம் குற்றம் நிரூபிக்கப்பட்ட குற்றவாளிக்கு , இரண்டு ஆண்டுகளுக்குக் குறையாத மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு மிகாத கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

அல்லது 2000 ரூபாவிற்கு குறையாத 5000 ரூபாவை விட அதிகரிக்காத தண்டப்பணம் அல்லது இவ்விரு தண்டனைகளும் வழங்கப்பட வேண்டும் என்று சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு அத்தியாவசிய பொது சேவை சட்டத்தின் 6 மற்றும் 7ஆம் உறுப்புரையில் மேற்படி குற்றத்தை செய்பவர் பணிபுரியும் உரிமையை இழக்க நேரிடும் எனவும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின் கீழ் குறிப்பிட்டவொரு நபர் மீது குற்றவியல் வழக்கு தொடரப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் , குறித்த நபர் அங்கத்துவம் வகிக்கும் தொழிற்சங்கத்தால் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் அவர் கலந்துகொண்டாரெனில் , அவரால் குற்றமிழைக்கவில்லை எனக் கூறும் காரணத்தை நியாயமானதென ஏற்றுக்கொள்ள முடியாது.

எழுதப்பட்ட சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவை எதுவாக இருந்தாலும், இந்தச் சட்டத்தின் விதிகளே மேலோங்கிக் காணப்படும். அதற்கேற்ப, இந்தச் சட்டத்தின் விதிகளுக்கும் பிற எழுதப்பட்ட சட்டத்தின் விதிகளுக்கும் இடையில் ஏதேனும் முரண்பாடுகள் ஏற்பட்டால், இந்தச் சட்டத்தின் விதிகளே ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் 6 மற்றும் 7 ஆம் உறுப்புரைகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

துறைமுகம் , விமான நிலையம் மற்றும் பொதுப் போக்குவரத்து சேவைகள் உள்ளிட்டவற்றை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் வர்த்தமானி அறிவித்தலில் கையெழுத்திடப்பட்டுள்ளது. நியாயமற்ற தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு முன்னர் அத்தியாவசிய பொது சேவைகள் சட்டத்தின் சக்தியை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தலில் கையெழுத்திட்டு எந்தவொரு துறைமுகத்திலும் உள்ள கப்பல்களிலிருந்து பயணிகள் அல்லது பொருள்களைத் தரையிறக்குதல் , ஏற்றுதல் , களஞ்சியப்படுத்தல் , விநியோகித்தல் மற்றும் உணவு , பானங்கள் , நிலக்கரி , எரிபொருள் , எண்ணெய் போன்றவற்றை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தியுள்ளார்.

சுங்க கட்டளை சட்டத்தின் நோக்கங்களுக்காக வரையறுக்கப்பட்ட, வீதிகள் , பாலங்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் உள்ளிட்டவை , ரயில் அல்லது விமானம் மூலம் போக்குவரத்து சேவைகளுக்கான வசதிகளை வழங்குதல் மற்றும் பராமரித்தல் ஆகியவை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அத்தியாவசிய சேவைகளாக வரையறுக்கப்பட்டுள்ளன. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.