தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் நோயாளர் வசதிகருதி மற்றுமொரு சேவை!
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு வருகின்ற நோயாளர்கள் பலமணிநேரங்கள் வைத்தியசாலையில் காத்திருக்கின்றனர் என்ற வேதனையை வைத்தியசாலை நிர்வாகத்திடம் பலர் முறையிட்டுள்ளனர்.
இது தொடர்பாக வைத்தியசாலையின் திட்டமிடல் பிரிவு, தரம் பேணும் பிரிவு, வைத்திய அத்தியட்சகர், வைத்திய நிபுணர்கள், வெளிநோயாளர் பிரிவு மருத்துவ உத்தியோகத்தர்களை உள்ளடக்கிய முகாமைத்துவ நிர்வாகக்குழு ஆராய்ந்து நோயாளர்களின் வசதி கருதி – அவர்களின் தேவையற்ற சிரமத்தைத் தவிர்க்கும் முகமாக – சரியாகத் திட்டமிட்ட ஒழுங்குமுறை ஒன்றை ஏற்படுத்தியுள்ளனர்.
வெளிநோயாளர் பிரிவு என்பது வைத்தியசாலையின் வளர்ச்சிக்கும் அதன் நற்பெயருக்கும் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்த வெளிநோயாளர் பிரிவில் மருத்துவ சேவையைப் பெறவருகின்ற நோயாளர்கள் காலை 5, 6 மணிக்கு வைத்தியசாலைக்குவந்து பிற்பகல் 2 மணி வரையில் சேவையைப் பெற்று வீடு செல்கின்ற துர்ப்பாக்கிய நிலைமை காணப்பட்டது.
இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்த முகாமைத்துவக்குழு, நோயாளர்களின் நலன் கருதி குறிப்பிட்ட ஒவ்வொரு மணி இடைவேளைக்கும் குறிப்பிட்ட நோயாளர்களை மருத்துவசேவைபெற வருமாறு நேர முகாமைத்துவம் செய்து சரியான ஒழுங்கமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், நோயாளர்கள் ஒரு நாளின் முழுப் பொழுதையும் வைத்தியசாலையில் செலவழிக்கவேண்டும் என்ற ஏக்கம் நீங்கப்பெற்றுள்ளது என மகிழ்ச்சியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை