இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஒத்துழைப்புக்களை வழங்கும் – அமெரிக்க தூதுவர்

இலங்கையுடனான 75 ஆண்டு கால இராஜதந்திர நட்புறவை தொடர்ந்தும் பேணுவதே எமது எதிர்பார்ப்பாகும். சகல நெருக்கடிகளிலிருந்தும் மீள்வதற்கு உலக உணவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வழிகளினூடாக இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்தும் அதன் ஒத்துழைப்புக்களை வழங்கும் என்று அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கான சத்துணவுத் திட்ட முன்னெடுப்புகளை பார்வையிடுவதற்காக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் அமெரிக்க தூதுவர் ஜுலி சங் ஆகியோர் கொழும்பு-15இல் அமைந்துள்ள புனித ஜோன் மகா வித்தியாலயத்துக்கு இன்று (13) திங்கட்கிழமை விஜயம் செய்திருந்தனர்.

இதன்போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

முன்னேற்றத்தை நோக்கியே நீங்கள் பாடசாலைக்கு வருகை தருகின்றீர்கள். பசியுடன் இருந்தால் உங்களால் அந்த முன்னேற்றத்தை அடைய முடியாது.

எனவே, இலங்கையில் 1.7 மில்லியன் பாடசாலை மாணவர்களை உள்ளடக்கிய உலக உணவுத் திட்டத்துடன் இணைந்து உணவு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று 3,000,000 கர்ப்பிணிகள் மற்றும் தாய்மாரும் இந்த செயற்றிட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்காக நிதி உதவிகள், உரம் உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளோம்.

அமெரிக்கா எதற்காக இவ்வாறான ஒத்துழைப்புக்களை வழங்குகின்றது என்ற கேள்வி எழக்கூடும். இவ்வாண்டு இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75ஆவது ஆண்டு நிறைவு கொண்டாடப்படுகிறது.

அத்தோடு இலங்கை அதன் 75ஆவது சுதந்திர தினத்தையும் கொண்டாடுகிறது. இந்த நட்புறவை தொடர்வதே எமது எதிர்பார்ப்பாகும்.

இளம் தலைமுறையினரான நீங்கள் முன்னேற்றமடைய வளர்ச்சியடைந்த நாடு அவசியம் என்று நம்புகின்றோம்.

இன்று நீங்கள் கல்வி கற்பதற்காக எத்தனை பெற்றோர்கள், மூதாதையர்கள் தம்மை அர்ப்பணித்துள்ளனர் என்பதை நினைவுகூர வேண்டும்.

நாம் தொடர்ச்சியாக இலங்கைக்கு ஒத்துழைப்புக்களை வழங்குவோம். உலக உணவுத் திட்டம் உள்ளிட்ட ஏனைய பல்வேறு வழிகளுக்கூடாகவும் நாம் எமது ஒத்துழைப்புக்களை வழங்குவோம் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.