கைவிடப்பட்ட சிசுக்களை பொறுப்பேற்பதற்கான நிலையத்தை ஸ்தாபிக்கும் அமைச்சரவை பத்திரம் விரைவில் – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை

குழந்தை பெற்றுக் கொள்ளும் பெற்றோர் அதனை தம்மால் வளர்க்க முடியாது என்ற நிலைமை ஏற்படும் போது குழந்தைகளைக் கைவிட்டுச் செல்கின்றனர்.

எனவே இவ்வாறான குழந்தைகளைப் பொறுப்பேற்பதற்காக ‘கைவிடப்பட்ட சிசுக்களை பொறுப்பேற்பதற்கான நிலையம்’ என்பதை ஸ்தாபிப்பதற்காக யோசனை விரைவில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க தெரிவித்தார்.

கடந்த வாரம் சிறுவர்கள் மீதான வன்முறை சம்பவங்கள் பல நாட்டில் பதிவாகியிருந்த நிலையில், அவை தொடர்பான விசேட ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது.

மேற்குலக நாடுகளிலுள்ள வைத்தியசாலைகளில் நீதிமன்றமொன்று ஸ்தாபிக்கப்பட்டிருக்கும். குழந்தைகளைப் பெறுவோர் தம்மால் அதனை வளர்க்க முடியாது எனக் கருதும் பட்சத்தில் அந்த நீதிமன்றத்தின் ஊடாக எவ்வித தகவலும் வெளியிடப்படாமல் குழந்தைகளை வைத்தியசாலையில் ஒப்படைக்க முடியும்.

அவ்வாறானதொரு முறைமையை இலங்கையிலும் அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை பத்திரமொன்று இதற்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும் அது தொடர்பில் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. குறித்த அமைச்சரவை பத்திரம் தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் –

கடந்த 2021 ஆம் ஆண்டு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் பணிப்பாளர் சபையால் இது தொடர்பில் நீண்ட கலந்துரையாடலை முன்னெடுத்து, ‘கைவிடப்பட்ட சிசுக்களை பொறுப்பேற்பதற்கான நிலையம்’ என்பதை ஸ்தாபிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது.

தாய் அல்லது தந்தையின் தனிப்பட்ட அடையாளத்தை வெளிப்படுத்தாது மாகாண மட்டத்தில் மாகாண வைத்தியசாலைகளை அண்மித்து இவற்றை ஸ்தாபிப்பதற்கு இதன் மூலம் திட்டமிடப்பட்டது. இந்த யோசனை அமைச்சரவை அங்கீகாரத்துக்காக 2022 நவம்பரில் சமர்ப்பிக்கப்பட்டது.

இது தொடர்பில் அமைச்சரவையுடன் தொடர்புடைய சட்ட அதிகாரியால் மதிப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டது. இந்த விடயம் நன்னடத்தை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு திணைக்களத்துக்கு உரித்துடையது என்பதால், அதன் ஊடாக இந்த யோசனையை அமைச்சரவைக்கு முன்வைப்பது உகந்து எனத் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பான பொறுப்பு வேறு நிறுவனங்களுக்கு காணப்பட்டாலும், அரசாங்கத்துக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் எம்மால் இந்த யோசனைகள் முன்வைக்கப்பட்டன.

அண்மையில் கோட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலின் கழிப்பறையில் குழந்தையொன்று கைவிடப்பட்டு சென்றமை தொடர்பான சம்பவங்கள் இடம்பெறும் போது, அவ்வாறான குழந்தைகளைப் பொறுப்பேற்பதற்கென பல இடங்கள் காணப்படுகின்றன.

அதற்கமைய மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் ஊடாக இந்த யோசனையை மீள சமர்ப்பிப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.