வெளிநாட்டுப் பணிக்கு அனுப்புவதாகக் கூறி இலட்சக்கணக்கில் பணமோசடி செய்த இலங்கை நபர் தப்பியோட்டம்!
இலங்கையிலிருந்து வெளிநாட்டுப் பணிக்கு அனுப்புவதாகக் கூறி 23 பேரிடம் லட்சக்கணக்கில் பணத்தைப் பெற்றுக் கொண்டு தமிழகத்துக்கு அகதியாகத் தப்பிச்சென்ற இலங்கை நபரிடம் பணத்தைக் கொடுத்து ஏமாந்தவர்களில் ஒருவர் ராமநாதபுரம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
திருகோணமலை – வெருகல் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் உட்பட 23 பேர் தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று பிழைக்கலாம் எனத் தீர்மானித்துள்ளனர்.
இதனையடுத்து, அதே பகுதியைச் சேர்ந்த ஜனார்த்தனன் என்பவரிடம், தலா 6 லட்சம் ரூபா வீதம் 23 பேர் பணத்தைக் கொடுத்து தங்களை எப்படியாவது ருமேனியா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாட்டுக்கு வேலைக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
இவர்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்ட ஜனார்த்தனன், குறித்த நபர்களை வெளிநாட்டுக்கு அனுப்பாமல், அங்கிருந்து பொதுமக்களிடம் பெற்ற பணத்துடன் சட்டவிரோதமாகத் தமிழகத்திற்கு அகதியாகப் படகு மூலம் தப்பித்து தனுஷ்கோடிக்குச் சென்று தற்போது மண்டபம் அகதிகள் முகாமில் அகதியாகத் தங்கியுள்ளார்.
இலங்கையில் லட்சக்கணக்கில் மோசடி செய்துவிட்டு இங்கிருந்து தப்பி அகதியாக இந்தியாவுக்குச் சென்று, மண்டபம் அகதிகள் முகாமில் தங்கி இருக்கும் ஜனார்த்தனன் மீது நடவடிக்கை எடுக்குமாறும் தங்கள் பணத்தைப் பெற்றுத் தர வேண்டும் என்றும் கூறி இலங்கையில் பணம் கொடுத்து ஏமாந்தவர்களில் ஒருவரான ஜெயக்குமார் என்பவர் விமானம் மூலம் இலங்கையிலிருந்து தமிழகத்திற்குச் சென்று மண்டபம் பொலிஸ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
ஜெயக்குமார் அளித்த முறைப்பாடுமீது பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் நேற்று (செவ்வாய்க்கிழமை) ராமநாதபுரம் மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து முறைப்பாடு அளித்துள்ளார்.
இலங்கையில் குற்றச் செயல்கள் புரிந்து விட்டு அகதிகள் போர்வையில் தமிழகத்துக்குத் தப்பி வருபவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதால் பொலிஸார் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை