கிளிநொச்சியில் மாணவர்கள் – ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் குறித்து தொழிற்சங்கங்கள் குற்றச்சாட்டு!
கிளிநொச்சி மாவட்டத்தில் கற்றல் உபகரணங்களை மாணவர்கள் வாங்குவதிலும், ஆசிரியர்கள் போக்குவரத்து உள்ளிட்ட சிரமங்களை எதிர்கொள்கின்றனர் எனவும் ஒன்றிணைந்த தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.
கிளிநொச்சி மாவட்ட ஆசிரியர் ஆலோசகர் சங்கம், கிளிநொச்சி மாவட்ட அதிபர் சங்கம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் ஆகியன இணைந்து தொழிற்சங்க போராட்டம் தொடர்பில் ஊடக சந்திப்பொன்றை கடந்த திங்கட்கிழமை ஏற்பாடு செய்துள்ளனர். இதன்போது மேற்கணடவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட ஆசிரியர் ஆலோசகர் சங்க செயலாளர் ரி.நிகேதன் தெரிவிக்கையில் –
எதிர்வரும் 15 ஆம் திகதி தேசிய ரீதியிலே முன்னெடுக்கப்படுகின்ற அடையாள பகிஷ்கரிப்பை கிளிநொச்சி மாவட்டத்தினுடைய ஆசிரிய ஆலோசகர் சங்கமும் தேசிய ஆசிரிய ஆலோசகர் சங்கத்தோடு இணைந்து மேற்கொள்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளோம்.
எங்களுடைய இந்த மாவட்டத்தைப்பொறுத்தவரையில், பெரும்பாலான ஆசிரியர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வருகை தருபவர்கள். அவர்கள் இங்கு வருகை தருகின்றபோது ஏற்படுகின்ற போக்குவரத்து செலவு, அவர்களின் தங்குமிடம் முதலானவற்றைப் பார்க்கின்றபொழுது பொருளாதார நெருக்கடி அவர்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்துவதாக இருக்கின்றது. அதைவிட, அவர்கள் தமது வாழ்வாதாரத்தை மேற்கொண்டு செல்வதற்குரிய செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்படுகின்றன.
பாடசாலைகளில் கல்வி கற்கின்ற மாணவர்களுடைய செயற்பாடுகள் முடங்குகின்ற தன்மையில் இருக்கின்றது. எமது மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பாலான மாணவர்கள் வறுமைக்கோட்டுக்குப்பட்டவர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் புதிய கல்வி ஆண்டிலே கால்தடம் பதிக்கவுள்ளனர். தமது கற்றலுக்குரிய உபகரணங்களைக் கொள்வனவு செய்வதென்பது இயலாத ஒன்றாக இருக்கின்றது.
அந்த வகையில், எங்களுடைய மாணவர்களும் ஆசிரியர்களும் பொருளாதார நெருக்கடியில் தவித்துக்கொண்டிருக்கின்ற இந்த நேரத்திலே, அதிலிருந்து மீளவேண்டும் என்ற நோக்கத்தோடு தேசிய ரீதியிலே எடுக்கப்படுகின்ற இந்த அரசாங்கத்துக்கு எதிரான ஒருநாள் பகிஷ்கரிப்பிலே கிளிநொச்சி மாவட்டம் சார்ந்த அதிபர்கள், ஆசிரியர்கள். ஆசிரிய ஆலோசகர்கள், அனைவரும் இணைந்து முகம் கொடுக்கின்றோம்.
பிள்ளைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், ஆசிரியர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள், அதிபர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள், அரச உத்தியோகஸ்தர்கள் ஒவ்வொருவரும் எதிர்நோக்குகின்ற பிரச்சினைக்கு அரசாங்கம் சரியான தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என்பது எமது கோரிக்கையாகும் எனத் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிளிநொச்சி மாவட்ட சங்க செயலாளர் ரி.சிவரூபன் கருத்து தெரிவிக்கையில் –
எதிர்வரும் 15 ஆம் திகதி தேசிய மட்டத்திலே முன்னெடுக்கப்படுகின்ற வேலைநிறுத்த போராட்டத்துக்கு கல்வித்துறை சார்ந கூட்டமைப்பாகிய அதிபர்கள், ஆசிரியர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் இணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பாக நாங்கள் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றோம்.
குறிப்பாக 8 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றது. ஏற்கனவே அதிபர் ஆசிரியர்களுக்கு வழங்குவதாக உடன்பட்டிருந்த சம்பள உயர்வில் முன்றில் ஒரு பங்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மிகுதி மூன்றில் இரண்டு பங்குகளை வழங்குமாறு கோரிக்கைகளை முன்வைக்கின்றோம்.
அந்த மூன்றில் இரண்டு பங்கை வழங்கும்வரைக்கும் அனைத்து அரசாங்க உத்தியோகஸ்தர்களுக்கும் 20 ஆயிரம் ரூபா இடைக்கால கொடுப்பனவை வழங்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கின்றோம்.
அது மாத்திரமல்லாது மாத சம்பளத்துக்கு விதிக்கின்ற வரியை அரசாங்கம் உடனடியாக நீக்கி அதற்கான தீர்வைத் தருவதுடன், ஆசிரியர்களால் பெறப்பட்டிருக்கின்ற வங்கிக் கடன்களுக்கு, அண்மையில் அதிகரிக்கப்பட்டுள்ள வட்டி வீதத்தை உடனடியாக குறைத்து, அவர்களின் சுமையை குறிக்க வேண்டும்.
பிள்ளைகள் மத்தியில் இருக்கின்ற போசனைக்குறைபாடு, கற்றல் உபகரணங்களைக் கொள்வனவு செய்வதில் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்புக்கள் மற்றும் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு வழங்க வேண்டும்.
மின்சாரம், தொலைபேசி மற்றும் ஏனைய சேவைகளுக்காகப் பெற்றோர்களிடமிருந்து பணத்தை அறவிடுகின்ற போது ஏற்படும் பெற்றோரின் சுமையைக் குறைக்க வேண்டும். ஜனநாயகத்தைச் சீர்குலைப்பதற்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்தி வைப்பதை நிறுத்தி உடனடியாக தேர்தலுக்கு வரவேண்டும் என நாங்கள் இந்தக் கூட்டமைப்பாகக் கோரிக்கை முன்வைக்கின்றோம்.
அத்துடன், பொதுமக்கள் போராட்டங்களின்போது அரசின் அடக்குமுறையை நிறுத்தி மக்களுடைய ஜனநாயக உரிமையைப் பாதுகாக்கவேண்டிய கட்டாயத்திலே அரசாங்கம் செயற்பட வேண்டும் என அழுத்தமாகக் கூறுகின்றோம். 40 இற்கு மேற்பட்ட தொழிற்சங்கங்களாக இந்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகக் கல்வி அமைச்சுக்கு அறிவித்துள்ளோம்.
இவ்வாறான கோரிக்கைகளைச் செய்து தராமல் இழுத்தடிப்பு இடம்பெறுமாக இருந்தால், தொழிற்சங்க நடவடிக்கையின் அடுத்தகட்டத்திற்குத் தள்ளப்படுவோம் என்பதையும் கூறிக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கிளிநொச்சி மாவட்ட அதிபர் சங்கத்தின் செயலாளர் கெ.விக்னராஜா மற்றும் கிளிநொச்சி மாவட்ட இலங்கைத’ தமிழ் ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் இ.ஜெயசுதர்சன் ஆகியேர் குறித்த போராட்டத்திற்கு தமது சங்கமும் ஆதரவு தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை