உள்ளூராட்சி தேர்தல் மூலம் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண முடியாது – பந்துல குணவர்தன
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் ஊடாக நாட்டின் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்க முடியாது. தற்போதுள்ள சூழலில் ஒவ்வொருவரும் தத்தமது அரசியல் தேவைகளுக்காகவே தேர்தலை நடத்துமாறு வலியுறுத்துகின்றனர் என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (14) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக தேர்தலை நடத்தக் கூடிய சந்தர்ப்பம் காணப்பட்டால் தேர்தல் ஆணைக்குழு அதற்கான நடவடிக்கையை எடுக்கும்.
எவ்வாறிருப்பிரும் தற்போதுள்ள நிலைமையில் தேர்தலை நடத்துவதில் காணப்படும் நெருக்கடி குறித்து திறைசேரி செயலாளரினால் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டில் எந்தவொரு பிரச்சினையும் காணப்படாத போதிலும் , உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாமை குறித்து எவரும் கேள்வி எழுப்பவில்லையே? அத்தோடு மாகாணசபை தேர்தல் இதுவரையிலும் நடத்தப்படவில்லை. அதனை நடத்துமாறு வலியுறுத்தி இவ்வாறு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லையல்லவா?
1979களில் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது முதலில் சென்று வாக்களிக்கும் ஐவர் கொல்லப்படுவர் என்றும் , தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும் என்று அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.
கூறியதைப் போன்றே முதலில் வாக்களித்த ஐவர் கொல்லப்பட்டனர். இவ்வாறு தத்தமது அரசியல் தேவைகளுக்கமைய தேர்தலை நடத்துமாறும் , நடத்த வேண்டாமெனவும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்ட வரலாறு எம் நாட்டில் காணப்படுகிறது.
தற்போதுள்ள நெருக்கடிகளை தேர்தல் தீர்க்குமானால் முதலில் நடத்த வேண்டியது தேர்தலையாகும். ஆனால் நிதி நெருக்கடிகளுக்கு அரசியல் ரீதியில் எந்தவொரு தீர்வினை வழங்க முடியாது என்றார்.
கருத்துக்களேதுமில்லை