நாட்டின் கல்வி மேம்பாட்டுக்கு தனியார் துறையின் பங்களிப்பு அவசியம் – மைத்திரிபால சிறிசேன
இலங்கை மாணவர்கள் மருத்துவம் சுகாதாரம் உட்பட அனைத்து துறைகளிலும் கல்வியை பெற்றுக்கொள்ள அரச துறை மற்றும் தனியார் துறையில் பூரண சிறப்புரிமைகள் இருக்க வேண்டும்.
அரச துறைக்கு மாத்திரம் இந்த சிறப்புரிமைகள் இருக்கவேண்டும் எனத் தெரிவிப்பதற்கு நாங்கள் எதிர்ப்பு என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஐ.என்.ஏ. மருத்துவ உயர்கல்வி நிறுவனத்தின் 3ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழா 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் –
ஐ.என்.ஏ. மருத்துவ உயர்கல்வி நிறுவனத்தின் செயற்பாடுகள் எனக்கு மகிழ்ச்சி அளிக்கின்றன. இந்த கல்வி நிறுவனத்தில் தமிழ்,முஸ்லிம் மாணவர்களே கல்வி பயில்கின்றனர். இலங்கையின் தென் மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள பாடசாலைகளில் வசதிகள் குறைவாகும். அந்தக் குறையை ஈடுசெய்ய இவ்வாறான கல்வி நிறுவனங்கள் அவசியமானவை.
அத்துடன் இன்றைய நாட்டின் நெருக்கடிமிக்க சூழல் காரணமாக துறைசார் நிபுணர்கள், புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். இது கவலைக்குரிய விடயமாகும்.
ஐ.என்.ஏ.கல்வி நிறுவனத்தில் அனைத்து துறைகளும் பயிற்றுவிக்கப்படுகின்றன. இது மகிழ்ச்சியான தருணமாகும். அழகு கலை தொடர்பாகவும் பயிற்றுவிக்கப்படுகின்றமையை அறிந்தேன். புத்திஜீவிகளை உருவாக்க இவ்வாறான நிறுவனங்கள் அவசியமாகும்.
கல்வி மேம்பாட்டுக்கு தனியார் துறையின் பங்களிப்பு அவசியமாகும்.அதனை நாம் ஊக்குவிக்க வேண்டும். அரச மற்றும் தனியார் துறைக்கு பூரண சிறப்புரிமைகள் இருக்க வேண்டும். கல்வி துறையில் அரச கல்வி நிறுவனங்கள் மாத்திரமே செயற்பட வேண்டும் என ஒருசிலர் கூறுகின்றனர்.
எனினும் அந்தக் கருத்துக்கு நான் ஒருபோதும் உடன்பட மாட்டேன். தனியார் கல்வி நிறுவனங்கள் கட்டாயம் செயற்பட வேண்டும். மருத்துவ துறைசார் தனியார் கல்வி நிறுவனங்களில் காணப்படும் வசதிகள் போன்று வசதிகளுடன் கூடிய அரச மருத்துவ கல்வி நிறுவனங்கள் நாட்டில் இல்லாதமையிட்டு நான் கவலை அடைகிறேன்.
எனவே நாடு எவ்வாறான பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் கல்விக்காக அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும். இந்த கல்வி நிறுவனத்தின் எதிர்கால நடவடிக்கைகள் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை