மீனவர்களின் வாழ்வாதார உதவிகளை மாவட்ட செயலகம் ஊடாக வழங்க நடவடிக்கை – டக்ளஸ்

கல்மடுக்குளத்தின் கீழ் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களின் வாழ்வாதார உதவி மாவட்ட செயலகம் ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கல்மடு குளத்தின் அபிவிருத்தி பணிகள் ஆரம்பமாகியுள்ளது. இதனால் குறித்த குளத்தின் நீர் முழுமையாக திறந்து விடப்பட்டுள்ள நிலையில், நன்னீர் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த குளத்தில் வாழ்வாதாரத்தினை முன்னெடுத்தவரும் 75 அங்கத்தவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அமைச்சருடன் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். குறித்த சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

குறித்த சந்திப்பு இன்று பகல் 1 மணியளவில் தர்மபுரம்ஆறுமுகநாவலர் முன்பள்ளி வளாகத்தில் இடம்பெற்றது. இதன்போது தமது வாழ்வாதாரம் இழக்கப்ப்ட்டுள்ள நிலையில்,தமக்கு நிவாரணம் பெற்று தருமாறும், இரணைமடு குளத்தில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு 25 பேருக்கு அனுமதி பெற்று தருமாறும் இதன்போது அமைச்சரிடம் கோரிக்கை முன்வைத்தனர்.

அதற்கு பதிலளித்த அமைச்சர், குறித்த இரண்டு விடயங்களும் தொடர்பாக எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. 75 நன்னீர் மீனவர்களிற்கும் மாவட்ட செயலகம் ஊடாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக 25 பேருக்கு இரணைமடு குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடுவது மற்றும் சங்கத்தினை பதிவு செய்வது தொடர்பாக பேசி 2 வாரத்திற்குள் அறிவிப்பதாகவும் இதன்போது தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.