வரிச் சலுகை வழங்குமாறு கோட்டாவை அழுத்தம் கொடுத்து வெளியேற்றிய தொழிற்சங்கத்தினர் தற்போது போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் – மஹிந்தானந்த
வரி சலுகை வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடும் அழுத்தம் பிரயோகித்து அவரை வெளியேற்றிய தொழிற்சங்கத்தினர் தற்போது பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
2019 ஆம் ஆண்டு வரி சலுகை ஊடாக சேமித்த நிதியை தற்போது வரியாக செலுத்துவது கடினமல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
ஸ்ரீPலங்கா பொதுஜன பெரமுன கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –
அரசாங்கம் அறிமுகப்படுத்திய புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கத்தினர் 15 ஆம் திகதி புதன்கிழமை பாரிய தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.பணி புறக்கணிப்பு ஊடாக அரசாங்கத்தை பலவீனப்படுத்துவதே இவர்களின் பிரதான நோக்கமாக உள்ளது.
அரச சேவையை வினைத்திறனான முறையில் முன்னெடுத்துச் செல்ல வேண்டுமாயின் வரி அறவிடுதல் சிறந்த முறையில் காணப்பட வேண்டும்.
20 சதவீதமாக காணப்பட்ட நேரடி வரி 35 சதவீதமாகவும்,80 சதவீதமாக காணப்பட்ட மறைமுக வரி 65 சதவீதமாகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த வரி திருத்தத்துக்கு எதிராக தான் தொழிற்சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டார்கள்.
இலங்கை துறைமுக அதிகாரசபையில் 10 ஆயிரத்து 500 பேர் பணி புரிகிறார்கள், இவர்களில் 52 சதவீதமானோரிடமிருந்து 5 ஆயிரம் ரூபாவும், 25 சதவீதமானோரிடமிருந்து 7 ஆயிரத்து 500 ரூபாவும், ஏனைய தரப்பினரிடமிருந்து 15 ஆயிரம் ரூபாவும் மாத வரியாக அறவிடப்படுகிறது. இலங்கை மின்சார சபையின் ஊழியர்களில் 47 சதவீதமானோரிடமிருந்து வரி அறவிடப்படுவதில்லை.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான எமது அரசாங்கம் 2019 ஆம் ஆண்டு வழங்கிய வரி சலுகையால் பொருளாதாரப் பாதிப்பு தீவிரமடைந்தது என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.
வரி அதிகரிப்புக்கு எதிராகத் தற்போது வீதிக்கு இறங்கி போராடும் தொழிற்சங்கத்தினர் தான் 2019 ஆம் ஆண்டு வரி சலுகை வழங்குமாறு அப்போதைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்கு கடும் அழுத்தம் பிரயோகித்தார்கள். பின்னர் அவர்களே அவரை வெளியேற்றினார்கள்.
2019 ஆம் ஆண்டு வரி சலுகையைப் பெற்றுக்கொண்டவர்கள் தற்போது வரி கொள்கைக்கு எதிராகப் போராடுகிறார்கள். வரிசலுகை ஊடாக பெற்றுக்கொண்ட இலாபத்தை தற்போது வரி விதிப்பு ஊடாகத் திருப்பி செலுத்தலாம்.
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு தொழிற்சங்கத்தினர் ஒத்துழைப்பு வழங்காவிட்டால் பொருளாதார பாதிப்பு தீவிரமடைந்து, நாட்டின் எதிர்காலம் கேள்விக்குள்ளாக்கப்படும். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை