ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரியவர்களுக்கு நிரந்தரமாக வாழ்வதற்கான வழியை ஏற்படுத்துங்கள்: தமிழ் அகதியின் கோரிக்கை

ஆஸ்திரேலியா: தற்காலிக விசாக்களிலும் கடல்கடந்த தடுப்புகளிலும் உள்ள அகதிகளுக்கு நிரந்தர விசாக்களை கோரி தமிழ் அமைப்புகளும் அகதிகள் உரிமைகளுக்கான அமைப்பும் போராட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறது.

இதில் பங்கேற்ற ஆஸ்திரேலிய தமிழ் காங்கிரசின் இயக்குநரும் முன்னாள் தமிழ் அகதியுமான நிமலாகரன் சின்னக்கிளி, தற்காலிகமாக உள்ள அகதிகளுக்கு நிரந்தர தீர்வைக் கோரியிருக்கிறார்.

அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் அகதிகள், ஆஸ்திரேலியாவின் படகு கொள்கை காரணமாக மலேசியா, இந்தோனேசியாவில் சிக்கியுள்ள அகதிகள் தொடர்பாகவும் இப்போராட்டத்தில் குரல் எழுப்பப்பட்டிருக்கிறது.

ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்ற தனது கடந்த காலத்தை பகிர்ந்த நிமலா, “கடந்த அக்டோபர் 2009யில் மலேசியாவிலிருந்து 253 தமிழர்களுடன் சிறிய படகில் ஆஸ்திரேலியாவை நோக்கி புறப்பட்டோம். ஆனால் அப்போதைய ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் கோரிக்கைக்கு இணங்க நாங்கள் இந்தோனேசிய கடற்படையால் தடுத்து நிறுத்தப்பட்டோம். சட்டவிரோதமாக பயணித்த எங்களை தடுப்புக் காவலுக்கு கொண்டு செல்ல முற்பட்டனர். நாங்கள் ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைய முயன்ற அகதிகள், நாங்கள் இந்தோனேசியா வர விரும்பவில்லை என்றோம். ஆஸ்திரேலியாவில் மீள்குடியமர்த்துவதற்கான உறுதியைக் கேட்டோம்.  அச்சிக்கல் ஆறு மாதங்களாக நீடித்த நிலையில் வலுக்கட்டாயமாக தடுப்பு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டோம்,” எனக் கூறியிருக்கிறார்.

அதன் பின்னர், இந்தோனேசியாவிலிருந்து ஆஸ்திரேலியாவில் மீள்குடியமர்த்தப்பட நான்கரை ஆண்டுகள் ஆனதாக அவர் பகிர்ந்திருக்கிறார்.

ஆஸ்திரேலிய பிரதமருக்கும் குடிவரவுத்துறை அமைச்சருக்கும் கோரிக்கை விடுத்துள்ள நிமலா, ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொண்டு ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியவர்களுக்கு நிரந்தரமாக வசிப்பதற்கான உதவியை செய்ய வேண்டும் எனக் கோரியிருக்கிறார்.

அப்படி தஞ்சமடைந்தவர்கள் ஆஸ்திரேலியாவில் பல ஆண்டுகளாக உழைத்து, வரி செலுத்தி பிற ஆஸ்திரேலியர்களைப் போலவே வாழ்வதாக நிமலா சுட்டிக்காட்டியிருக்கிறார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.