தேர்தல் குறித்து எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நீதிமன்றத்தை நாடவுள்ளோம் – சாகர காரியவசம்
மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் உள்ளூராட்சி மன்றங்கள் இயங்குவது ஜனநாயகத்துக்கு முரணானது. தேர்தல் தொடர்பில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு உறுதியான தீர்வு காண நீதிமன்றத்தை நாடத் தீர்மானித்துள்ளோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ஷ தலைமையில் பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் உள்ள பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இடம்பெற்ற பேச்சின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மற்றும் பதவி காலம் நிறைவு பெறும் உள்ளூராட்சி மன்றங்களின் நிலைமை தொடர்பாக விசேட பேச்சில் ஈடுபட்டோம்.
உள்ளூராட்சி மன்ற நிர்வாகம் மக்கள் பிரதிநிதிகள் அல்லாத தரப்பினரால் முன்னெடுக்கப்படுகின்றமை ஜனநாயகத்துக்கு முரணானது என உயர்நீதிமன்றம் கடந்த காலங்களில் தீர்ப்பளித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு உறுதியான தீர்வைப் பெற்றுக்கொள்ள நீதிமன்றத்தை நாட தீர்மானித்துள்ளோம்.
பொதுஜன பெரமுனவின் ஆலோசனைக்கு அமைய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்படுவதாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டு அடிப்படையற்றது.
தேர்தலை பிற்போடும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்கவில்லை. மாகாண சபைத் தேர்தல் எப்போது நடக்கும் என்ற நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியவர்கள் தான் தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தல், மக்களின் ஜனநாயக உரிமை தொடர்பில் கருத்துரைக்கிறார்கள்.
கட்சி என்ற ரீதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அல்ல எந்த தேர்தலையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம். தேர்தலை நடத்துவது தொடர்பாக ஆணைக்குழு வெளியிட்ட தீர்மானங்களால் முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளமையை அவதானிக்க முடிகிறது.
சகல தரப்பினருடன் கலந்தாலோசித்து ஒரு தீர்க்கமான தீர்மானத்தை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்க வேண்டும்.
சகல கட்சி செயலாளர்களுடன் எதிர்வரும் 23 ஆம் திகதி பேச்சில் ஈடுபட தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. அன்றைய தினம் இடம்பெறும் பேச்சைத் தொடர்ந்து தேர்தல் தொடர்பாக ஒரு தீர்மானம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை