ஆளுநர்களினால் மாகாண சபைகள் முழுமையாக பலவீனமடைந்துள்ளன – ரோஹித அபேகுணவர்தன
ஆளுநர்கள் நிர்வாகத்தால் மாகாண சபைகள் முழுமையாகப் பலவீனமடைந்துள்ளன, இந்நிலை உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தோற்றம் பெற இடமளிக்க முடியாது. பொது இணக்கப்பாட்டுடன் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு வெகுவிரைவாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளோம் என முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியால தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ஷ தலைமையில் பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் உள்ள பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இடம்பெற்ற பேச்சின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –
பொருளாதாரப் பாதிப்பு தீவிரமடைந்து, மக்கள் போராட்டம் வெடித்து அதனூடாக ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிக் கொள்ளலாம் என எதிர்பார்த்திருந்தவர்களின் எதிர்பார்ப்பு முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், எமக்கும் அரசியல் ரீதியில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. இருப்பினும் பொருளாதார மீட்சிக்காக அவர் எடுத்த கடுமையான தீர்மானங்களால் நாட்டில் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டு நாடு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தற்போதைய பிரதான பேசு பொருளாக உள்ளது. ஏப்ரல் 25 ஆம் திகதி தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகண்டு வெகுவிரைவில் தேர்தலை நடத்த வேண்டும் என ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளோம்.
உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகம் மக்கள் பிரதிநிதிகள் அல்லாத தரப்பினரிடம் ஒப்படைத்தால் மாகாண சபைகளுக்கு நேர்ந்துள்ள கதியே உள்ளூராட்சி மன்றங்களுக்கும் நேரிடும். ஆளுநர்களின் நிர்வாகத்தால் மாகாண சபைகள் முழுமையாகப் பலவீனமடைந்துள்ளன.
2019 ஆம் ஆண்டு பாரிய அர்ப்பணிப்புடன் கோட்டபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்தோம், ஆனால் அவர் எங்களின் பேச்சைக் கேட்கவில்லை. அவர் பதவி விலகியவுடன் நாடாளுமன்றத்தின் ஊடாக இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவை தெரிவு செய்தோம்,ஆகவே தேர்தல் தொடர்பில் அவரிடம் நாங்கள் உரையாடப் போவதில்லை. – என்றார்.
கருத்துக்களேதுமில்லை