ஜனாதிபதி தேர்தலை நடத்தும் அதிகாரம் ரணிலுக்கு கிடையாது – உதய கம்மன்பில
பதவி காலம் முடிவடைவதற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்தும் அதிகாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கிடையாது. ஏனெனில் அவர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவர் அல்ல,பொதுத்தேர்தலில் இழந்த மக்கள் செல்வாக்கை ஜனாதிபதி தேர்தல் ஊடாக ஒருபோதும் பெற முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
சுதந்திர மக்கள் கூட்டணி காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
2023 ஆம் ஆண்டு நவம்பர் ஜனாதிபதி தேர்தலை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்பு குறித்து அறியாமல் இவ்வாறான கருத்துக்களை குறிப்பிட்டு மக்களை தவறாக வழிநடத்துவதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
அரசியலமைப்பின் 31(3 அ) மற்றும் (ஆ) உறுப்புரைக்கு அமைய ஜனாதிபதி தனது 4 வருட பதவி காலத்தை முழுமைப்படுத்துவதற்கு முன்னர் மீண்டும் தேர்தலில் போட்டியிடுபவராக இருந்தால் ஜனாதிபதி தேர்தலை நடத்த முடியும்,அவ்வாறாயின் எதிர்வரும் நவம்பர் மாதம் 18 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலை அறிவிக்க முடியும்.
இருப்பினும் 31(3) இ உறுப்புரையில் மக்களால் தெரிவு செய்யப்படாத இடைக்கால ஜனாதிபதியால் நான்கு வருட பதவி காலம் நிறைவு பெறுவதற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பை விடுக்க முடியாது என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகவே முன்னாள் ஜனாதிபதிக்கு அந்த அதிகாரம் இருந்தது,ஆனால் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அந்த அதிகாரம் இல்லை.ஏனெனில் அவர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவர் அல்ல.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்க பாரிய தடையாக உள்ளார். 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் இழந்த மக்கள் செல்வாக்கை ஜனாதிபதி தேர்தல் ஊடாக பெற்றுக்கொள்ள ஜனாதிபதி முயற்சிக்கிறார்.நாட்டு மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியை முழுமையாக புறக்கணித்துள்ளார்கள்,இனியொருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியினால் எழுச்சிப்பெற முடியாது என்றார்.
கருத்துக்களேதுமில்லை