நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்களை அரசாங்கம் தண்டிக்குமா ? – காவிந்த ஜயவர்தன
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு பொருளாதார மீட்சிக்கு சாதகமாக அமையும் என்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம். பொருளாதார நெருக்கடியைத் தீவிரப்படுத்தி நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய தரப்பினருக்கு எதிராக இந்த அரசாங்கம் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்குமா என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன ஆளும் தரப்பினரிடம் கேள்வியெழுப்பினார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் பெற்றோலிய வளங்கள் சட்ட ஒழுங்குவிதிகள் நிதி பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் ஒதுக்கீட்டு சட்ட கட்டளைகள் மற்றும் நாடாளுமன்றம், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் மீறல் தொடர்பான பிரேரணைகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றுள்ளதையிட்டு மகிழ்ச்சியடைய வேண்டும். பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு சிறந்த வழியாக அமையும். ஆகவே நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்டு எடுப்பதற்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கியுள்ள ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதற்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட நிபந்தனைகள் என்ன? அதனால் நடுத்தர மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் என்ன? மற்றும் முகாமைத்துவ நடவடிக்கைகள் என்ன? என்பது தொடர்பாக விசேட கவனம் செலுத்த வேண்டும்.
நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளி,இலங்கையை சர்வதேசத்தின் மத்தியில் மலினப்படுத்திய தரப்பினருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன? கடந்த அரசாங்கம் உரம் தொடர்பில் எடுத்த தவறான தீர்மானம் பொருளாதாரப் பாதிப்புக்கு ஆரம்ப புள்ளியாக அமைந்தது.
அதிக விலை கொடுத்து உரத்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளார்கள். ஆனால் நெருக்கடிகளை ஏற்படுத்தியவர்கள் சுதந்திரமாக சுகபோகமாக வாழ்கிறார்கள். இவர்களுக்கு எதிராக இந்த அரசாங்கம் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கைகளை எடுக்குமா?
பொருளாதார மீட்சிக்கு அரசாங்கம் எடுக்கும் சிறந்த திட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். எதிர்க்கட்சி என்பதால் ஆளும் தரப்பின் பழக்கத்தை போல் அனைத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை. அரசாங்கம் நாட்டு மக்களுக்கு உண்மையுடனும், வெளிப்படைத்தன்மையுடனும் செயற்பட வேண்டும். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை