ஆசிரியர் இடமாற்றங்கள் இடை நிறுத்தப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்
அரச பாடசாலைகளில் ஆசிரியர் இடமாற்றங்கள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் ஆகியவற்றினால் இன்று புதன்கிழமை கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு நிதியமைச்சு, ஜனாதிபதி அலுவலகம், ஜனாதிபதி மாளிகை மற்றும் காலி முகத்திடல் பகுதிகளுக்குள் செல்வதற்கு கோட்டை நீதவான் திலின கமகேவினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கோட்டை பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்து நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார். போராட்டக்காரர்கள் பொது மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தாத வகையில் போராட்டத்தில் ஈடுபடலாம் என்றும், எனினும் அவர்கள் கலவரமாகவும், சட்டவிரோதமாகவும் செயற்பட்டால் தண்டனைச் சட்டப் பிரிவுகளின்படி பொலிஸார் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் நீதவான் உத்தரவிட்டார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோருக்கு மேற்குறித்த பகுதிகளில் பேரணியாக செல்ல தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டமையால் சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை