சாலிய பீரிஸின் அலுவலகம் முன்பாக மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் குறித்து சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம்
ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸின் அலுவலகத்துக்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
இலங்கையைச்சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரனான ‘ஹரக் கட்டா’ என்று அறியப்படும் நதுன் சிந்தக்க சார்பில் ஆஜரானமைக்கு எதிர்ப்புத்தெரிவித்து இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதுகுறித்து கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியிருக்கும் சட்டத்தரணிகள் சங்கம், சட்டத்தரணி என்ற ரீதியில் சாலிய பீரிஸினால் முன்னெடுக்கப்படும் தொழில்சார் கடமைகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாதிருப்பதை உறுதிப்படுத்துமாறு பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிடம் கடிதம் மூலம் வலியறுத்தியுள்ளது.
அதுமாத்திரமன்றி சாலிய பீரிஸின் அலுவலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமையானது, தமது சேவைபெறுனரைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு அவர் கொண்டிருக்கும் உரிமைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்றும் சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் அவரது தொழில்சார் உரிமையையும், அவரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அச்சங்கம் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கைவிடுத்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை