ஹர்ஷவை வளைத்துப்போட விக்ரமசிங்க தீவிர முயற்சி! நிதி அமைச்சு பதவியும் தயார்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா அரசுடன் இணைந்தால் அவருக்கு நிதி அமைச்சு கிடைக்கும் என்று அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரை வளைத்துப் போடும் முயற்சியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைவிடாது தொடர்ந்தும் முயற்சி செய்து வருகின்றார் என்றும் அந்தத் தகவல்கள் மேலும் கூறுகின்றன.

குறிப்பிட்ட தகவலின்படி ரணிலுக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார, ஹர்ஷ டி சில்வா ஆகிய மூவரே தேவைப்பட்டனர்.

மனுஷ, ஹரின் ஆகியோர் ஏற்கனவே அரசுடன் இணைந்து விட்டார்கள்.

ஹர்ஷவை அரசுடன் இணையுமாறு ரணில் பல தடவைகள் பேசிவிட்டார். நிதி அமைச்சு தருவதாக வாக்குறுதி வழங்கியுள்ளார்.

ஆனால், ஹர்ஷ விரும்புவதோ தனித்துச் செல்லாமல் கட்சியுடன் போய்ச் சேர்வது தான்.

ஆரம்பத்தில் ஹர்ஷவை ஜனாதிபதியாக்குவோம் என்ற கூற்றை முன்வைத்தவர் ஹரின்.

அரசுடன் இணையும் முன் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் பல தடவைகள் பேசினார் ஹரின்.

குறைந்தது கட்சியில் இருந்து 5 பேரையாவது அரசுடன் சேர்ப்போம். இந்தப் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உதவுவோம் என்றார் ஹரின். ஆனால் ஹரினின் எந்த கதையையும் சஜித் கேட்கவில்லை.

இதனால் மனுஷவையும் இணைத்துக்கொண்டு அரசுடன் சேர்ந்தார் ஹரின்.

இப்போது ஹரின், ரணிலின் பணிப்புரைக்கமைய ஹர்ஷவையும் அரசுடன் சேர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார் என்று அறிய முடிகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.