வெடுக்கு நாறிமலை சிவலிங்கம் இடித்தழிப்பு தமிழ் எம்.பிக்கள் கண்டுக்காதமை வேதனை! மக்கள் பிரச்சினையை நேரில் அறிந்து சரவணபவன் குமுறல்
வடக்கில் அண்மைக்காலமாக தொடரும் திட்டமிட்ட பௌத்தமயமாக்கலின் தொடர்ச்சியான செயற்பாடே வெடுக்குநாறிமலை சிவலிங்கம் இடித்தழிப்பாகும். இங்குள்ள பிரச்சினைகளை தாம் ஆதரித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டுகொள்வதில்லை என்று மக்கள் குற்றஞ்சாட்டினர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வெடுக்கு நாறிமலை ஆதிசிவலிங்கம் உடைக்கப்பட்டமை தொடர்பாக நேரடியாக சென்று களநிலைமைகளை ஆராய்ந்து ஆலய பூசகருடன் கலந்துரையாடிய பின் கருத்து தெரிவித்த நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் –
அப்பட்டமாக தங்களுடைய சர்வதிகார நிலையைத் தமிழ் மக்களுக்கு மேலே துணித்து எங்கெங்கெல்லாம் தமிழ் மக்களின் பூர்வீக இடங்களை ஆக்கிரமித்து அதனைப் பௌத்தமயமாக்குவதற்கு இடம்பெறுகின்ற செயற்பாடுகளில் ஒன்றாகவே இன்று இந்த வெடுக்குநாறிமலையினுடைய சிவலிங்கம் உடைத்து புதருக்குள் எறியப்பட்டுள்ளது.
வெடுக்குநாறிமலை சிவலிங்கம் என்பது ஒரு மலையிலே காணப்படுகின்றது. இந்த மலையிலே தங்களுடைய புத்தர் சிலையை வணங்க வேண்டும் என்பதற்காக மிகுந்த ஆவலுடன் தொடர்ச்சியாக மேற்படி பகுதியை பல்வேறுபட்ட இடர்களையும் இன்னல்களையும் கொடுத்து ஆக்கிரமித்து வருகின்றார்கள். குறிப்பாக 1960 ஆம் ஆண்டுகள் முதல் பெரிய நிலப்பரப்புகளில் இந்த முல்லைதீவு மாவட்டத்திலே – வயல் நிலங்களிலே – விவசாயத்தை மேற்கொண்டு விவசாயிகளினுடைய பல நிலங்கள் இன்று பறி முதல் செய்யப்பட்டுள்ளன. சுமார் 20, 30 இடங்களினுடைய பெயர்களை நான் இந்த வெடுக்குநாறிமலை பகுதியில் மக்களுடன் கலந்துரையாடிய பொழுது இவ்வாறு அபகரித்து இருப்பதை மக்கள் எனக்குக் கூறி இருந்தார்கள்.
தமிழ் பௌத்தத்தை கூட ஏற்பதற்கு அவர்கள் தயாராக இல்லாத நிலையில் முறையான – நீதியான -ஆராய்ச்சிகளுக்கும் அவர்களின் தயாரில்லை. அந்த வகையில் சிங்கள பௌத்தமயமாக்கலை இந்த நாடு பூராகவும் மேற்கொள்வதற்கு இவர்கள் செயற்ப்பட்டுகொண்டிருக்கின்றார்கள்.
ரணில் விக்கிரமசிங்க கூட கூறியிருந்தார் ஆயிரம் புத்தர் சிலைகளை வைப்பேன் என்று. இவர்களுடைய அறிவு போதாமையின் வெளிப்பாடே இந்தச்செற்பாடுகளாகும். இருப்பினும் இவ்வாறு புத்தர் சிலைகளை அமைப்பதற்கு மிகச் சாதுரியமாக அதனை நிலைநிறுத்துவதற்கு அரச படைகள் அதனுள் முக்கியமாக இந்த பொலிஸாரும், இராணுவமும் செயற்படும் நிலையில் குறிப்பாக தொல்பொருள் திணைக்களம் இந்த திணைக்களம் எங்கிருந்தது என்றே தெரியாத ஒரு திணைக்களம் வடக்கு மாகாணத்திலே எங்காவது ஓர் இடத்தில் அரசமரம் முளைத்து விட்டால் அதனை வடமாகாணத்திலே தமக்குரிய பகுதியாக அடையாளப்படுத்தி வருகின்றார்கள்.
அவ்வாறு சம்பந்தமே இல்லாது அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஒன்றாகதான் இந்த வெடுக்குநாறிமலையும் வந்திருக்கின்றது. ஆனால் நான் சந்தித்த வெடுக்கு நாறிமலையின் ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பூசகர் எனக்கு கூறுகின்றார் நான் இவ்வாலயத்தில் ஐந்தாவது சந்நிதி பூசகர் என்று மேலும் குறித்த பூசகருடன் கலந்துரையாடியதற்கு அமைவாக அதன் வரலாறும் அதன் பார்ப்பரியமும் பன்னெடுங்காலமாக பேணப்பட்டு வருகின்றதை என்னால் உணர முடிந்தது.
இவ்வாறான நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தையும் திட்டமிட்ட பௌத்தமயமாக்கலையும் மேற்கொள்ளுகின்றார்கள். மாவட்டத்தினுடைய எல்லை கிராமங்களில் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டு கிராமங்களினுடைய பெயர்களும் மாற்றப்பட்டுவிட்டன. மிகவும் வளம் மிகுந்த தமிழர்களினுடைய பூர்வீக வரலாறு மிகுந்த முல்லைதீவு மண், கண் முன்னே பறிபோய் கொண்டிருக்கின்றது. எங்களுடைய இனத்தின் பரம்பலைக்கூட அவர்கள் தங்களுடைய நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் மாற்றி அமைக்கின்றார்கள். இவ்வாறு தமிழர்களையும் சிங்களவர்களையும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இணைத்து தமிழர்களை முல்லைதீவு மாவட்டத்தில் சிறுபான்மையினராகக் காட்ட முனைகின்றார்கள்.
நான் ஒலுமடுவிற்க்கும் சென்றிருந்தேன் அங்கு இருக்கக்கூடிய வெடுக்குநாறிமலை ஆலய நிர்வாக சபையினருடன் கலந்துரையாடிய நிலையில் ஆலய நிர்வாக சபையினரை வெடுக்குநாறிமலைக்குச் செல்வதற்கு நீதிமன்ற தடை விதித்து இருக்கின்றது. பூசகர் மட்டும் சென்று பூஜை செய்யலாமென்று இருக்கின்றது. குறிப்பாக இவ்வாறான பிரச்சினைகள் எழுகின்ற பொழுது இவர்களுக்காக குரல் கொடுப்பதற்காக வன்னி மாவட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வதில்லை என்று அந்தப் பகுதி வாழ் மக்கள் கவலையுடன் தெரிவித்தனர். இது மிகவும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய ஒரு விடயமாகக் காணப்படுகிறது. இதுவரைக்கும் அங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களோ அவர்களுடைய கட்சிகளுக்காக வேலை செய்பவர்களோ செல்லவில்லை. அந்த மக்கள் நான் நேரடியாக சென்ற பொழுது முன்வைத்த குற்றச்சாட்டாக பிரச்சினைகள் இடம்பெறுகின்ற பொழுது தாம் ஆதரித்த தமிழ்தேசியக் கூட்டமைப்பு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருவதில்லை என்றும் குரல் கொடுப்பதில்லை என்றும் தெரிவித்து இருந்தார்கள். முன்னின்று குரல் கொடுக்க வேண்டியவர்கள் முன்னின்று குரல் கொடுக்க வேண்டும்.
நீதிமன்றம், வெடுக்கு நாறிமலைக்கு செல்வதற்கு அனுமதி வழங்கினாலும் பூசகர் செல்வதற்கு பொலிஸார் தடுத்து நிறுத்துகின்றனர். பூசகர் செல்லாது விடினும் அரச நிகழ்ச்சி நிரலுடன் பலர் சென்று வருகின்றார்கள்.இப்பொழுது இங்கு தகவலாக ஒன்று கிடைத்தது இந்தச் சம்பவம் இரண்டொரு நாள்களுக்கு முன்னரே இடம்பெற்றிருப்பதாகவும் மற்றுமொரு பாதையால் ஜீப்ரக வாகனத்தில் சிலர் வந்து சென்றனர் எனவும் இதற்கு பாதுகாப்பாக பொலிஸார் வந்து சென்றனர் எனவும் கூறப்படுகின்றது.
ஆகவே, இவ்வாறு நிகழ்ச்சி நிரலிற்குட்பட்டே இது இடம்பெறுகிறது. பொலிஸின் ஆதரவு, தொல்பொருள் திணைக்களத்தின் நீதியற்ற செயற்பாடு இந்த தொல்பொருளியல் திணைக்களத்தின் சின்னத்தை பார்க்கின்ற பொழுதே விளங்குகிறது சமத்துவமற்ற ஒரு மத அடிமைச் சின்னமாக விளங்குகிறது. இந்த இடத்திலே என்னுடன் பேசிய வயது முதிர்ந்த ஒருவர் இதற்காக போராட்டம் செய்யவேண்டும் எமது எதிர்ப்பை பதிவு செய்யவேண்டும் என கூறினார். தனது பிள்ளைகளையும் போராட்டத்தில் இழந்தவர் வடமராட்சி மண்ணை சேர்ந்தவர் ஆனால் மண் பற்றுள்ளவர்களாக இருக்கின்றார்.இவருடைய சிந்தனை அனைவருக்கும் மனதில் அடிப்படையாக வரவேண்டும். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை