மட்டுவில் பன்றி தலைச்சி அம்மன் ஆலயத்தில் சிறப்புறநடந்த 2 ஆவது பங்குனி திங்கள் பூஜை!
வரலாற்று சிறப்புமிக்க மட்டுவில் பன்றி தலைச்சி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பங்குனி இரண்டாம் திங்கள் திருவிழா வெகு விமர்சையாக இடம்பெற்றது.
நேற்று அதிகாலை பக்த அடியவர்கள் அம்மனுடைய தீர்தகேணியில் நீராடி பன்றி தலைச்சி அம்மனுக்கு பொங்கல் பொங்கியும் அம்மனுக்கு பிடித்த உணவான கஞ்சி சமைத்தும் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர்.
பால்குட பவனி எடுத்தல், ஆட்டக்காவடி, தூக்குக் காவடி, தீச்சட்டி எடுத்தல் என பக்த அடியார்கள் தங்களுடைய நேர்த்திக்கடன்களை செலுத்தியிருந்ததனை அவதானிக்க முடிந்தது.
அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை வாழ்த்து தோத்திரம் என ஆகமமுறைப்படி வசந்த மண்டப பூஜை ஆரம்பமாகி பன்றித்தலைச்சி அம்மன் உள்வீதியுலா வருகை தந்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்திருந்தார்.
யாழ். மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்துக்கு நாட்டின் அனைத்து பாகங்களிலும் இருந்து பக்த அடியவர்கள் வருகை தருகின்ற அதே வேளையில், இலங்கை பாதுகாப்பு படை மற்றும் சாரணர் இயக்கம் மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதையும் அவதானிக்க முடிகின்றது.
கருத்துக்களேதுமில்லை