மக்களுக்கு பயனற்ற நுகர்வோர் அதிகார சபையை நீக்குங்கள் – ஜகத் குமார

பணவீக்கம் அதிகரித்த போது பன்மடங்கு அதிகரிக்கப்பட்ட உணவு பொருள்களின் விலை பணவீக்கம் குறைவடைந்த பின்னரும் குறைவடையவில்லை. நுகர்வோர் அதிகார சபை என்பதொன்று உள்ளதா, இல்லையா என மக்கள் விசனம் தெரிவிக்கிறார்கள்.

நுகர்வோரின் நலனுக்காக செயற்பட முடியாவிட்டால் நுகர்வோர் அதிகார சபையை நீக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தவுள்ளேன் என ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார்.

தலங்கம பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

கடந்த ஆண்டின் இறுதி பகுதியில் பணவீக்கம் 70 சதவீதத்துக்கு உயர்வடைந்த போது உணவு பொதி உட்பட அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை பன்மடங்கு அதிகரிக்கப்பட்டது. வியாபாரிகள் பணவீக்கத்துக்கு நிகராக அத்தியாவசியப் பொருள்களின் விலைகளை நிர்ணயித்தார்கள்.

பணவீக்கம் தற்போது வீழ்ச்சியடைந்து செல்கிறது,ஆனால் உணவு பொருள்களின் விலை குறைவடையவில்லை. பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அத்தியாவசிய உணவு மற்றும் சேவை துறைகளின் விலை குறைப்பு ஊடாக மாத்திரமே நிவாரணம் வழங்க வேண்டும்.

பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீண்டு விட்டோம் என அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் அத்தியாவசிய பொருள்கள் மற்றும் சேவைகளின் விலைகள் தாங்கிக்கொள்ள முடியாத நிலையில் உள்ளது, வியாபாரிகள் உணவு பொருள்களின் விலைகளை தீர்மானித்துக் கொள்கிறார்கள்,

அத்தியாவசியப் பொருள்களின் விலைகளை அரசாங்கம் தீர்மானிக்க வேண்டும். அதனை விடுத்து நடுத்தர மக்களை நெருக்கடிக்குள்ளாக்கி இலாமடையும் வர்த்தக மாபியாக்கள் விலையை நிர்ணயித்துக் கொண்டால் அரசாங்கத்துக்கான தேவை ஏற்படாது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் அத்தியாவசியப் பொருள்களின் விலையை வர்த்தகர்கள் தீர்மானித்தார்கள். இறுதியில் கோட்டாபய ராஜபக்ஷவை நாட்டு மக்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். நாட்டில் பாரிய அரசியல் மாற்றம் ஏற்பட்டது.

அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை தொடர்பில் விடயதானத்துக்குப் பொறுப்பான அமைச்சர் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதனை விடுத்து தேவையற்ற காரணிகளில் அவதானம் செலுத்தக் கூடாது. அத்தியாவசியப் பொருள்களின் விலை தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையை கோப் குழுவுக்கு அழைத்து பேச்சு மேற்கொண்ட போது சந்தையில் பொருள்களின் விலை தொடர்பாக ஆராய முடியாது. ஆனால் பொருள்களின் விலையை நிர்ணயிக்க முடியும் எனக் குறிப்பிட்டார்கள்.

நுகர்வோரின் நலனைக் கருத்திற் கொண்டு நுகர்வோர் அதிகார சபை ஸ்தாபிக்கப்பட்டது. ஆகவே, நுகர்வோருக்காக நுகர்வோர் அதிகார சபை செயற்படாவிட்டால் அதனை இரத்து செய்வது சிறந்ததாக அமையும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்தவுள்ளேன். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.