நாட்டு மக்களை எதிர்த்துக்கொண்டு நாணய நிதிய நிபந்தனைகளை அமுல்படுத்த முடியாது – சம்பிக்க

சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ள கடினமான நிபந்தனைகளை சபிக்கவும் முடியாது, மனதாற ஏற்கவும் முடியாது, நிராகரிக்கவும் முடியாது. கடுமையான நிபந்தனைகளை செயற்படுத்த சகல தரப்பினரையும் ஒன்றிணைத்து செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் கோரிக்கைகளுக்கு பேச்சு ஊடாக தீர்வு காண்பதற்கு பதிலாக அரசாங்கம் அரச பல பிரயோகத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. நாட்டு மக்களை எதிர்த்துக்கொண்டு சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை முழுமையாக அமுல்படுத்த முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

பத்தரமுல்லை பகுதியில் இடம்பெற்ற சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு சம்பிக்க குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில் –

நாடு வங்குரோத்து நிலையை அடைந்துள்ளதால் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் நாடாளுமன்றத்தில் தேசிய சபை ஸ்தாபிக்கப்பட்டு பொருளாதார ஸ்தீரப்படுத்தல் உப குழு உருவாக்கப்பட்டது.

பொருளாதார மீட்சிக்காக இனங்காணப்பட்ட தொழிற்துறையினருடன் பேச்சுகளை மேற்கொண்டு விரிவான அறிக்கையை தேசிய சபைக்கு சமர்ப்பித்துள்ளோம்.

அறிக்கையின் உள்ளடக்கங்களை அரசாங்கம் முழுமையாக செயற்படுத்த வேண்டும்.

நாடு வங்குரோத்து நிலையை அடைந்துவிட்டது என அரசாங்கம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து வங்குரோத்து நிலையின் தன்மையை நாட்டு மக்கள் தமது அன்றாட வாழ்க்கையில் எதிர்கொண்டார்கள்.

நாடு வங்குரோத்து அடைவதற்கு நாங்கள் என்ன செய்தோம். ஆட்சியாளர்களின் முறையற்ற நிர்வாகத்தாலும், ஊழல் மோசடியாலும் நாடு வங்குரோத்து நிலையை அடைந்தது எனக் கருதி நாட்டு மக்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக வீதிக்கு இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். ஆட்சியாளர்களை விரட்டியடித்தார்கள்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் எடுத்த தூரநோக்கமற்ற தீர்மானங்களால் நாடு வங்குரோத்து நிலையை அடைந்தது. சுதந்திரத்தின் பின்னர் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டன. ஆனாலும், நாட்டை வங்குரோத்து நிலைக்குக் கொண்டு செல்லவில்லை.

ரூபா மற்றும் டொலர் ஊடாக வரவு – செலவுக்கு இடையில் பாரிய பற்றாக்குறை காணப்படுகிறது.

1954 ஆம் ஆண்டுக்கு பின்னர் வரவு – செலவுத் திட்ட பற்றாக்குறை தீவிரமடைந்தது. அரச செலவுக்கும் வரவுக்கும் இடையில் பற்றாக்குறை காணப்படும்போது கடன் பெற்று அரச செலவுகள் முகாமைத்துவம் செய்யப்பட்டன.

இறுதியில் 2012 ஆம் ஆண்டு பெற்றுக்கொண்ட 10 ஆயிரம் மில்லியன் டொலருக்கான தவணை கடன் தொகையை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் வங்குரோத்து நிலை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் அரச வருமானம் 3500 பில்லியன் ரூபாவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய வாழ்க்கை செலவுகளை அடிப்படையாக கொண்டு அரச செலவு 11500 பில்லியன் ரூபாவாக உயர்வடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

வரவு 3500 பில்லியனாக காணப்படும்போது செலவு 11500 பில்லியனாக உயர்வடைகையில் வங்குரோத்து நிலையை அறிவிப்பதை தவிர மாற்று வழிகள் ஏதும் கிடையா.

இவ்வாறான பின்னணியிலேயே சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றுள்ளது.

2032 ஆம் ஆண்டை இலக்காகக் கொண்டு சர்வதேச நாணய நிதியம் கடுமையான நிபந்தனைகளை முன்வைத்துள்ளது. இந்த நிபந்தனைகளை சபிக்கவும் முடியாது, முழுமையாக ஏற்கவும் முடியாது, இரத்து செய்யவும் முடியாது.

10 பிரதான நிபந்தனைகளை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றுள்ளது. கடந்த காலங்களைப் போன்று இம்முறையும் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்ற முடியாது.

2025 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் மொத்த தேசிய உற்பத்திகளை 2.3 சதவீதத்தால் அதிகரித்துக்கொள்ள வேண்டும். அத்துடன் குறுகிய காலத்துக்குள் தேசிய வருமானத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும். இதற்கமைய 2026 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் மொத்த தேசிய வருமானத்தை 15.3 சதவீதத்தால் அதிகரித்துக்கொள்ள வேண்டும்.

2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் லிபரல் கொள்கையை பின்பற்றியவர்களால் 12 சதவீதமாக காணப்பட்ட தேசிய வருமானம், 8 சதவீதமாக வீழ்ச்சி நிலைக்கு தள்ளப்பட்டது.

2026 ஆம் ஆண்டு அரச செலவுகள் 19.4 வீதத்தால் குறைக்கப்பட வேண்டும்.

மொத்த தேசிய உற்பத்திகளை குறுகிய காலத்துக்குள் அதிகரித்துக்கொள்வது இலகுவானதொரு காரியமல்ல, சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கு அமைய சராசரி நிதி அவசியத்தை 13 சதவீதத்தால் அதிகரிக்க வேண்டுமாயின், தேசிய கடன் அறவீட்டை குறைந்த மட்டத்தில் நீக்க வேண்டும்.

ஊழியர் சேமலாப நிதியம், வங்கி வைப்புகளுக்கு பாதிப்பு ஏற்படும். ஆகவே, சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து பட்டாசு வெடித்து கொண்டாடி பெருமைகொள்வது அவசியமற்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான நிபந்தனைகளை செயற்படுத்த சகல தரப்பினரையும் ஒன்றிணைத்து அரசாங்கம் பயணிக்க வேண்டும். ஆனால், அரசாங்கம் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு பதிலாகத் தன்னிச்சையாக செயற்படுகிறது. பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கம் அரசாங்கத்துக்கு கிடையாது.

உலக சந்தையில் எரிபொருளின் விலை குறைவடைந்துள்ளதன் பின்னணியில் அதன் பயனை நாட்டு மக்களுக்கு வழங்க அரசாங்கம் அவதானம் செலுத்தவில்லை.

எரிபொருள் தாங்கி ஒன்றின் விலை 70 டொலராக காணப்படும் நிலையில் தேசிய மட்டத்தில் எரிபொருளின் விலை குறைக்கப்படவில்லை.

மறுபுறம் மின்சார கட்டணம் 300 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதால் எரிபொருள் விலை மற்றும் மின்கட்டண அதிகரிப்பால் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், மின்சார சபை அதிக இலாபம் பெறுகின்றன என்பதை பொறுப்புடன் குறிப்பிட்டுக்கொள்கிறேன். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.