பயங்கரவாத புதிய எதிர்ப்புச் சட்டம் எனத் தெரிவித்து ஜனநாயகவிரோத சட்டமென்று வெளியிடப்பட்டுள்ளது! அரசைச் சாடுகிறார் விஜித்த ஹேரத்
அரசாங்கம் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் எனத் தெரிவித்து ஜனநாயக விரோத சட்டம் ஒன்றையே வர்த்தமானி மூலம் வெளியிட்டிருக்கிறது. இந்த சட்டத்தின் பிரகாரம் தொழிற்சங்க போராட்டம் இடம்பெறுவது தொடர்பில் ஊடகங்களில் அறிவுறுத்தும் ஊடகவியலாளரும் பயங்கரவாதியாகவே கருதப்படுவார் என மக்கள் விடுதலை முன்னணி ஊடகப்பேச்சாளர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
அரசாங்கம் வர்த்தமானிப்படுத்தி இருக்கும் புதிய பங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் –
அரசாங்கம் கொண்டுவந்திருக்கும் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஐக்கிய நாடுகள் அமைப்பால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவுகோல்களுக்கு விரோதமானது.
ஏனெனில் வேலை நிறுத்தப்போராட்டம் தொடர்பில் இலத்திரனியல் ஊடகங்களில் அல்லது வேறு ஊடகங்கள் ஊடாக அறிவுறுத்துவதும் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் பிரகாரம் பயங்கரவாத செயலாகும்.
அதன் பிரகாரம் தொழிற்சங்க போராட்டம் ஒன்று தொடர்பாக கையேடு விநியோகித்தல், ருவிட்டர் தகவல் அனுப்புதல் வட்ஸ் அப் தகவல் அனுப்புதல் பயங்கரவாத செயலாகவே அதன் சடடமூலத்தின் 118 ஆவது சரத்தில் அதுதொடர்பான விதிகள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.
அதேபோன்று ஏதாவதுதொரு தொழிற்சங்க போராட்டம் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் அறிக்கையிட்டால் அவரையும் இந்த சட்டத்தின் பிரகாரம் கைதுசெய்ய முடியுமாகிறது.
அரசாங்கம் பயங்கரவாத வெளியீடுகளாக வரைவிலக்கனப்படுத்தும் வெளியீடுகளின் உள்ளடக்கங்களை இலத்திரனியல் ரீதியாக அனுப்புவதும் பயங்கரவாதச் செயலாகவும் சட்ட மூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் யாராவது தொழிற்சங்க போராட்டம் ஒன்று தொடர்பில் கதைத்தால் அவர் பயங்கரவாதியாகப் பெயரிடப்படுவார். அதேபோன்று ஏதாவது ஒரு நடவடிக்கையை அனைத்து மக்களும் ஒன்றிணைந்து மேற்கொண்டாலும் பயங்கரவாத முத்திரை குத்தமுடியும் போன்ற சரத்துக்களும் அதில் இருக்கின்றன.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரேரணைகளை செயற்படுத்திக்கொண்டு, மக்களுக்கு வாழமுடியாத மிகவும் கடுமையான நிலைமை நாள்தோறும் ஏற்பட்டு வருவதால், அதற்கு எதிரான மக்களின் எதிர்ப்பை அடக்குவதற்கே பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் என்ற பெயரில் வர்த்தமானி படுத்தி இருக்கின்றமை, ஜனநாயக லிரோத சட்டமாகும். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை