இலகு ரயில் சேவை மீண்டும் ஆரம்பம் குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை! ஜப்பான் தூதுவர் கூறுகிறார்
கொழும்பு – மாலபே இடையிலான இலகு ரயில் சேவைத்திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் ஹிடேகி மிசுகோஷி தெரிவித்துள்ளார்.
இலங்கை மோட்டார் வர்த்தக சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலகு ரயில் திட்டம் தொடர்பில் இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால், இவை அனைத்தும் இலங்கை அரசாங்கத்தின் சீர்திருத்தங்கள் எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றன மற்றும் ஜப்பான் வர்த்தக சமூகத்தின் நம்பிக்கையை இலங்கையால் மீண்டும் பெற முடியுமா என்பதைப் பொறுத்தது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜப்பானின் ஜைக்கா நிறுவனத்தால் 2.2 பில்லியன் டொலர் கடன் திட்டத்தின் கீழ் கொழும்பு, கோட்டையிலிருந்து மாலம்பே வரையான இலகு ரயில் சேவைத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
கொழும்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக மக்களுக்கு சிறந்த போக்குவரத்து வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக கடந்த 2016ஆம் ஆண்டு ஜப்பான் கடன் திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டத்தை 2020 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் தன்னிச்சையாக இரத்து செய்தது.
ஜைக்கா நிறுவனத்தால் 12 ஆண்டுகள் சலுகை காலம் உள்ளடங்கலாக, 40 ஆண்டுகளுக்கு 0.1 சதவீத வட்டியுடன் கடனை மீள செலுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டிருந்தது.
எவ்வாறிருப்பினும், இதனை ஏற்றுக்கொள்ளக்கூடிய எவ்வித காரணமும் இன்றி, இலங்கை அரசாங்கம் இரத்து செய்துள்ளது. 2020 செப்ரெம்பர் 24ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை பத்திரத்துக்கமையவே இந்தத் திட்டம் இரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு எட்டப்பட்டதன் பின்னர், இந்தத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஜப்பான் இணங்கியுள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது. எவ்வாறிருப்பினும், ஜப்பான் தூதுவர் அதற்கு மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை