கச்சதீவில் நிறுவப்பட்டுள்ள புத்தர்சிலையை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுங்கள்! தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

கச்சதீவில் புத்தர்சிலையொன்று நிறுவப்பட்டமையைக் கடுமையாகக் கண்டித்திருக்கும் இந்திய மக்களவை உறுப்பினர் தொல்.திருமாவளவன், அந்த புத்தர்சிலையை அகற்றுவதற்கும் அந்தப் பகுதியில் மதரீதியான ஒருமைப்பாட்டை நிலைநாட்டுவதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இந்திய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

சில வாரங்களுக்கு முன்னர் கச்சதீவில் புத்தர்சிலையொன்று வைக்கப்பட்ட விவகாரம் தமிழ்மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும், எதிர்ப்பையும் தோற்றுவித்திருந்தது. கச்சதீவிலுள்ள புனித அந்தோனியார் தேவாலயம் இலங்கை மற்றும் இந்தியவாழ் கத்தோலிக்கர்களின் முக்கிய வழிபாட்டுத்தலமாகும்.

இவ்வாறானதொரு பின்னணியில் கச்சதீவில் விகாரை அமைப்பதற்கான முயற்சிகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும், கச்சதீவில் பாதுகாப்புப்பணிகளுக்காக நிறுவப்பட்டுள்ள கடற்படை இணைப்பில் பணிபுரியும் கடற்படையினரில் பெரும்பான்மையானோர் பௌத்தர்கள் என்பதால், அவர்களின் மதவழிபாட்டு நடவடிக்கைகளுக்காக ஒரு சிறிய புத்தர்சிலை கடற்படையினரின் இல்லத்துக்கு அருகில் வைக்கப்பட்டிருப்பதாகக் கடற்படை விளக்கமளித்திருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் கச்சதீவில் புத்தர்சிலை வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் மக்களவையில் விவாதிப்பதற்கு மக்களை உறுப்பினர் தொல்.திருமாவளவன் மக்களவையின் செயலாளர் நாயகத்திடம் கடிதம் மூலம் அனுமதிகோரியுள்ளார்.

‘சிங்கள இனவாதிகள் மதரீதியான முரண்பாட்டைத் தோற்றுவிக்கும் நோக்கில் கச்சதீவில் புத்தர்சிலையொன்றை நிறுவியுள்ளனர். அங்கு புனித அந்தோனியார் தேவாலயம் மாத்திரமே இருப்பதுடன், வருடாந்தத் திருவிழாவும் இடம்பெற்று வருகின்றது. எதுஎவ்வாறெனினும் அங்குள்ள கிறிஸ்தவர்களை விரட்டும் நோக்கில் சிங்கள இனவாதிகள் அப்பகுதியில் பெரியதொரு புத்தர்சிலையை நிறுவியுள்ளனர். இந்நடவடிக்கை தமிழ்நாட்டிலும், தமிழீழத்திலும் வாழும் தமிழர்களுக்கு எதிரானது மாத்திரமல்ல. மாறாக இது அவர்களின் மதரீதியான உரிமைகளுக்கும் எதிரானதாகும்’ என்று அந்தக் கடிதத்தில் தொல்.திருமாவளவன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இந்தச் செயலைக் கடுமையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ள அவர், கச்சதீவில் வைக்கப்பட்டுள்ள புத்தர்சிலையை அகற்றுவதற்கும் அந்தப் பகுதியில் மதரீதியான ஒருமைப்பாட்டை நிலைநாட்டுவதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இந்திய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.