சாய்ந்தமருதில் 3 உணவகங்களுக்கு நீதிமன்றத்தால் தண்டப்பணம் விதிப்பு! 

சாய்ந்தமருதில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் பழுதடைந்த உணவுகள் கைப்பற்றப்பட்டுள்ளதை தொடர்ந்து, 3 உணவகங்களுக்கு நீதிமன்றத்தால் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

உணவுப் பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொது மக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் தேசிய ரீதியாக அனுஷ்டிக்கப்பட்டு வரும் ‘தேசிய உணவுப் பாதுகாப்பு’ வாரத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேசத்தில் உணவு தயாரிப்பு, உணவு விற்பனை, உணவு விநியோகம் முதலிய செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் உணவு நிலையங்களில் திடீர் பரிசோதனை, முற்றுகை நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

இதன்போது மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் பழுதடைந்த உணவுகள் பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.

இந்நிலையில் பழுதடைந்த சம்சா வைத்திருந்தமை, ஹோட்டல் கழிவு நீரை முறையாக அகற்றாமை, குளிர்சாதனப் பெட்டியை முறையாக பராமரிக்காமை போன்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் 3 உணவகங்கள் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டன.

அதனை தொடர்ந்து அந்த 3 உணவகங்களுக்கு எதிராகவும் கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, குறித்த உணவகங்களுக்கு 15 ஆயிரம் ரூபா, 10 ஆயிரம் ரூபா, 5 ஆயிரம் ரூபா என்றளவில் நீதிமன்றம் தண்டப்பணம் விதித்துள்ளது.

உணவகங்களின் அசுத்த நிலை, உணவைக் கையாள்வதில் உள்ள ஒழுங்கீனம், பொருத்தமற்ற உணவுகளை நீண்ட நான்களுக்கு குளிர்சாதனப்பெட்டிகளில் தேக்கி வைத்தல், சமையல் பாத்திரங்கள் சுத்தமின்மை, சமையல் பொருன்கள் தரமின்மை போன்றவற்றை கண்டறிவதற்கான பரிசோதனை நடவடிக்கைகள் தற்போது சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பொதுச் சுகாதார பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது தொடர்பில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி கூறுகையில் –

மக்களதும், பாடசாலை மாணவர்களதும் சுகாதாரம் மற்றும் உணவுச் சுகாதாரத்தை நடைமுறைப்படுத்தவும் பாதுகாக்கவும் மேம்படுத்தவுமே இத்தகைய தொடர்ச்சியான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இனிவரும் காலங்களில் பகல், இரவு நேரங்களில் இயங்கும் உணவு நிலையங்களில் திடீர் பரிசோதனைகள் இடம்பெறும். – என்றார்.

அதேவேளை மாவடிப்பள்ளி, நற்பிட்டிமுனையிலும் சில உணவகங்கள் பரிசோதிக்கப்பட்டு, அங்கும் பழுதடைந்த, மக்கள் பாவனைக்கு உதவாத உணவுப் பொருள்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டதோடு, உணவக உரிமையாளர்கள் உணவுப் பரிசோதகர்களால் எச்சரிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.