ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தை மே மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஏற்பாடு! நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தகவல்
நாட்டின் அபிவிருத்திக்கு ஊழல் ஒழிப்பு சட்டம் பலம்மிக்கதாக இருக்கவேண்டும். அதன் பிரகாரம் சர்வதேசம் ஏற்றுக்கொள்ளும் வகையில் புதிய ஊழில் ஒழிப்பு சட்டமூலம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
எதிர்வரும் மே மாதமளவில் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க எதிர்பார்க்கிறோம் . அத்துடன் இந்த சட்டமூலம் சர்வதேச நாணய நிதியத்தின் தேவைக்கு அல்ல. நாட்டில் ஊழலை ஒழிப்பதற்கே கொண்டுவரப்படுகிறது என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
நீதி, சிறைசாலைகள் மற்றும் அரசமைப்பு சீர்திருத்த அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் –
நாடொன்றை நிரவகிப்பதில் பாரிய பிரச்சினையாக ஊழல் தலைதூக்கி இருக்கிறது. இது அரச, தனியார் துறை மற்றும் அரசியல்வாதி, அதிகாரிகள் என வித்தியாசம் இல்லாமல் இடம்பெறுகிறது. ஊழலை ஒழிப்பதற்கு லஞ்சம் ஒழிக்கப்படவேண்டும். லஞ்சம் ஒழிப்பு சட்டம் எமது நாட்டில் 1971 காலப்பகுதியில் இருந்து வந்தது.
என்றாலும் காலப்பகுதியில் அதில் மாற்றங்கள் ஏற்பட்டு, இலஞ்ச ஊழில் ஆணைக்குழு அமைக்கப்பட்டபோதும் அதுதொடர்பாகவும் குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன. 1994இல் சந்திரிக்கா குமாரதுங்கவின் காலத்தில் ஊழில் ஒழிப்பு விடயம் பாரியளவில் தேர்தல் மேடைகளில் பேசப்பட்டு வந்தன.
லஞ்சம் ஊழலை ஒழப்பதற்கு சட்டம் கொண்டுவருவதாக சந்திரிக்கா குமாரதுங்க பகிரங்கமாக தெரிவித்து வந்தார். அதன் பிரகாரம் இலஞ்ச ஊழல் ஒழிப்பு சட்டம் நாடாளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்டு ஆணைக்குழு அமைக்கப்பட்டது.
என்றாலும் அந்த ஆணைக்குழு முறையாக செயற்படத் தவறியதுடன் சுயாதீன ஆணைக்குழு என்றவகையில் அதன் ஆணையாளர்கள் நினைத்த பிரகாரம் செயற்பட ஆரம்பித்தனர்.ஆணைக்குழுவும் அரசியல் மயமாக்கப்பட்டது. 5 வருடங்களுக்கு ஒரு வழக்கு கூட முறையாகத் தொடுக்கவில்லை.
அதனால் அந்த ஆணைக்குழுவில் எந்த பிரயோசனமும் இல்லை என்பது தெரியவந்தது. பின்னர் அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு நாங்கள் 2004 இல் ஐக்கிய நாடுகளின் ஊழல் ஒழிப்பு சமவாயத்தில் கைச்சாத்திட்டோம்.
அதில் சர்வதேச தரம்வாய்ந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு சட்டமூலம் ஒன்றைத் தயாரிப்பதென நாங்கள் வாக்குறுதி அளித்திருந்தோம். என்றாலும் 2015 வரை அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
2015இல் நாங்கள் 19 ஆம் திருத்தத்தை கொண்டுவந்து இலஞ்ச ஊழலை தடுப்பதற்கு அதனூடாக நடவடிக்கை எடுத்தோம். அதற்காக பெறுகை ஆணைக்குழு மற்றும் கணக்காய்வு ஆணைக்குழு என இரண்டு ஆணைக்குழுக்களை புதிதாக நியமித்தோம். தற்போதும் அந்த ஆணைக்குழுக்கள் செயற்பட்டு வருகின்றன.
அத்துடன் தற்போது தயாரிக்கப்பட்டுள்ள ஊழல் ஒழிப்பு சட்டத்தில் சுயாதீன ஆணைக்குகுழுக்களின் ஆணையாளர்கள் தாங்கள் சுயதீனம் எனத் தெரிவித்துக்கொண்டு நினைத்த பிரகாரம் செயற்பட முடியாது.
ஆணையாளர் தனது கடமையை முறையாக மேற்கொள்கிறாரா எனத் தேடிப்பார்த்து அவரை நீக்கும் முறை உள்வாங்கப்பட்டிருக்கிறது. அதேபோன்று ஆணைக்குழுக்களுக்கும் ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமிப்பதை நீக்கி இருக்கிறோம். சேவையில் இருப்பவர்களையே நியமிக்க நடவடிக்கை எடுத்திருக்கிறது.
மேலும் பொதுக்கள் மற்றும் பொறுப்புக்கள் சட்டம் நீக்கப்பட்டு, அதனை ஊழல் ஒழிப்பு சட்டத்துக்கு கீழ் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. தற்போதுள்ள அந்த சட்டம் காலம் கடந்த சட்டமாகும்.
பொது சொத்துக்கள் தொடர்பாக ஆவணங்கள் வழங்கப்பட்டாலும் அதனை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்கு எந்த முறையும் அதில் இல்லை. விசேடமாக சொத்துக்கள் பொறுப்புக்கள் தொடர்பாக விதிவிலக்களிக்கப்பட்டவர்கள் அனைவரும் இதில் உள்வாங்கப்பட்டிருக்கின்றனர்.
ஜனாதிபதி, வெளிநாடுகளுக்கான தூதுவர்கள், ஆணையாளர்கள் உட்பட பலரும் இதில் உள்வாங்கப்பட்டிருப்பதுடன் அதன் நடவடிக்கைகள் ஒன்லைன் முறையில் மேற்கொள்ள முடியுமான வகையில் இலகுபடுத்தி இருக்கிறோம். சொத்துக்கள் தொடர்பாகக் கண்காணிக்கும் அதிகாரம் ஆணையாளருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்னர் இவ்வாறானதொரு அதிகாரம் இருக்கவில்லை.
அத்துடன் ஊழல் ஒழிப்பு சட்டத்தில் தகவல் வழங்குநரின் உரிமையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில் அரச துறையில் தனது உயர் அதிகாரியின் ஊழல் மோசடிகள் தொடர்பில் கீழ் நிலை அதிகாரி தெரிவிப்பதில்லை.
அதனால் தனது தொழிலுக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சம் அவருக்கு இருக்கிறது. அவர் பழிவாங்கப்படலாம். அதனால் அவ்வாறு தகவல் வழங்குபவர்களின் உரிமையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
மேலும் இந்த சட்டமூலம் தொடர்பாக சர்வதே நாணய நிதியத்துடன் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களையும் பெற்றுக்கொண்டிருக்கிறோம். அவர்களின் கருத்துக்கள் நாட்டுக்கு தேவை என்பதற்காகவே ஏற்றுக்கொண்டோம். மாறாக அவர்களுக்கு கீழ்படிவதற்கு அல்ல. சர்வதேச நாணய நிதியத்தின் பிரேரணைகள் பெரும்பாலும் தொழிநுட்பம் சார்த்தனவாகவே இருந்தன.
எனவே நாட்டில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கு அச்சப்படுவதுக்குக் காரணம் ஊழலாகும். இதனை ஒழிக்காமல் முதலீட்டாளர்களுக்கு எந்த ஊக்குவிப்புகளை மேற்கொண்டாலும் அதில் பயனில்லை. அதனால் எதிர்வரும் மே மாதமளவில் ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பித்து அனுமதித்துக்கொள்ள எதிர்பார்க்கிறோம். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை